×

திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழை பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எ.வ.வேலு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இன்று காலை ரூ37 கோடியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பாலம் அமைக்க அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழக அரசு ரூ4 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ம் ஆண்டு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 2 சொகுசு படகுகளை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வழங்கியது.

கன்னியாகுமரி படகு தளத்தில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாததாலும், கொரோனா தொற்று பாதிப்பாலும் படகு போக்குவரத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சொகுசு படகு சவாரியையும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் விரைவுப்படுத்தப்பட்டது. அதன்படி 2 சொகுசு படகுகளையும் படகு துறையிலிருந்து வட்டகோட்டை வரை சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரியில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார்.

கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மேயர் மகேஷ் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்ததால் ரூ8.25 கோடி மதிப்பில் 2 புதிய படகுகள் சுற்றுலா துறை சார்பில் வாங்கப்பட்டது. இதில் ஒரு படகு குளிர்சாதன வசதி கொண்டது. தற்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு மிக உதவியாக இருக்கும்.

அதேபோல் விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை பாலம் அமைக்க முதல்வரிடம் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் பணிகளும் போடப்பட்டன. ரூ37 கோடி மதிப்பில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. ஓராண்டு காலத்தில் இந்த கண்ணாடி இழை பாலப்பணிகள் நிறைவு பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் படகு தள விரிவாக்க பணிகளையும் அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். அதற்காக கொண்டு வரப்பட்ட பார்ஜர் கப்பல் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து விவேகானந்தர் பாறையில் இருந்தவாறு திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பால பணிகளை கொடியசைத்து தொடக்கி வைத்து அது தொடர்பாகவும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

ஏசி படகு கட்டணம் ரூ450
இந்த சொகுசு படகுகளுக்கு ஏசி வசதி கொண்ட இருக்கைக்கு ரூ450 கட்டணம். ஏசி அல்லாத இருக்கைக்கு ரூ350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி படகு முழுவதும் ஏசி வசதி கொண்டதாகும். திருவள்ளுவர் படகு மொத்தம் 150 இருக்கைகளில் 131 இருக்கைகள் ஏசி அல்லாததும், 19 இருக்கைகள் ஏசி வசதி கொண்டதுமாகும்.

The post திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழை பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எ.வ.வேலு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar ,Vivekanandar ,Minister ,A. Etb. ,Kanyakumari ,A. Etb. Velu ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி