×

திருப்பதி அருகே பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம்

*கோயில் முழுவதும் புனிதநீர் தெளிப்பு

திருமலை : திருப்பதி அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று நடைபெற்றது. பின்னர், கோயில் முழுவதும் வாசனை திரவியம் கலந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது. திருப்பதி அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் மே 31 முதல் ஜூன் 8 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரமோற்சவத்திற்கு முன் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று நடத்தப்பட்டது. இதில் நித்ய சேவைகளுக்கு பிறகு காலை 8 மணி முதல் 10.30 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதில், கோயில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. அதன்பின், நாமகட்டி, திருச்சூரனம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், கட்டி கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கிழங்கு போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 11.30 மணி முதல் பக்தர்கள் சர்வ தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் துணை இஓ கோவிந்தராஜன், ஏஇஓ பிரபாகர், கண்காணிப்பாளர் வாணி, கோயில் தலைமை அர்ச்சகர்கள் சூர்யகுமார் ஆச்சார்யா, கோயில் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்நிைலயில், மே 30ம் தேதி அன்று அங்குரர்பணத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. 31ம் தேதி காலை கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகனம், ஜூன் 1ம் தேதி காலை சின்ன சேஷ வாகனம் இரவு அன்னம் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.

2ம் தேதி காலை சிம்ம வாகனமும் இரவு முத்து பந்தல் வாகனம், 3ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனம், இரவு சர்வபூபால வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர். அன்று மாலை கல்யாண உற்சவம் நடைபெறும். 4ம் தேதி காலை மோகினி அவதாரம், இரவு கருட வாகனம், 5ம் தேதி காலை அனுமந்த வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 6ம் தேதி காலை 6ம் தேதி காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 7ம் தேதி காலை தேர், இரவு குதிரை வாகனத்தில் தேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.

8ம் தேதி காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவுபெறுகிறது அதனை எடுத்து அன்று மாலை கொடி இறக்கப்படுகிறது. பிரமோற்சவத்தின் போது காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் வாகனசேவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

ஜூன் 3ம்தேதி சுவாமி கல்யாண உற்சவம்

ஜூன் 3ம் தேதி மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை சுவாமி கல்யாண உற்சவம் நடைபெறும். தம்பதிகள் இருவர் ₹500 செலுத்தி கல்யாண உற்சவத்தில் பங்கேற்கலாம். இதையொட்டி, இந்து தர்மபிரசார பரிஷத், தாச சாகித்ய திட்டம் மற்றும் அன்னமாச்சார்யா திட்டம் ஆகியவற்றின் கீழ் தினமும் ஆன்மிகம், பக்தி இசை, கலாச்சார நிகழ்ச்சிகள், பஜனைகள் நடத்தப்படும்.

The post திருப்பதி அருகே பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் appeared first on Dinakaran.

Tags : prasanna vengateswarar temple ,tirupati ,Prasanna Venkateswara Swami Temple ,Prasannah Venkateswarar Temple ,
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...