×

தஞ்சாவூர் பகுதியில் பெய்த மழையால் மினி சரணாலயம் போல் காட்சியளிக்கும் வயல்-மாடு, கொக்கு, நாரைகள் இரை தேடுவதில் போட்டியிடுகின்றன

வல்லம் : தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சிவகாமிபுரம் பகுதியில் வயல்களில் புற்கள் செழித்து வளர்ந்து இருக்க அதை மேயும் மாடுகளுடன் கூட்டணி போட்டது போல் கொக்கு, நாரைகளும் சுற்றி சுற்றி வந்து புழுக்களையும், பூச்சிகளையும் உணவாக்கி கொள்ளும் காட்சி மினி சரணாலயம் போல் மனதை கொள்ளை கொள்கிறது.
குறுவை, சம்பா, தாளடி மற்றும் உளுந்து, பயறு சாகுபடி என்று தொடர்ந்து நடந்து பின்னர் கோடை உழவும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.

இதில் கோடை உழவை அதிகளவு விவசாயிகள் மேற்கொள்வதில்லை. காரணம் வயலை காற்றாடப் போட்டு வைத்து மண் வளத்தை மேம்படுத்துவர். இதனால் அடுத்த சாகுபடி பயிர்களுக்கு இயற்கையான மண் சத்துக்கள் கிடைக்கும் என்பதால்தான். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவர்.

இந்த காலக்கட்டடத்தில் இதுபோன்ற வயல்களில் புற்கள் முளைத்து வளரும். அப்போது வயல்களில் ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தஞ்சை அருகே சிவகாமிபுரம் உட்பட பல பகுதிகளில் வயல்களில் புற்கள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மாடுகள் வைத்துள்ளவர்கள் தங்களின் மாடுகளை புற்கள் அதிகம் வளர்ந்துள்ள வயல்களில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.இந்த மழையால் வயல்களில் தண்ணீரும் தேங்கியுள்ளது.

இதனால் வயலில் மேயும் மாடுகளுடன் கூட்டணி போட்டது போல் கொக்குகள், நாரைகள், சிறு குருவிகள், மைனாக்கள் வயல்களில் இறங்கி தேங்கி நிற்கும் தண்ணீரில் புழு, பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன. மாடுகள் ஒரு இடத்தில் மேய்ந்து விட்டு மற்றொரு இடத்திற்கு நகரும் போது கொக்குகளும், நாரைகளும் ஜிவ்வென்று வானில் எழும்பி மீண்டும் வயலில் அமர்வதை பார்ப்பதற்கே ரம்மியமாக, மினி சரணாலயமா என்று வியக்க வைக்கிறது.

The post தஞ்சாவூர் பகுதியில் பெய்த மழையால் மினி சரணாலயம் போல் காட்சியளிக்கும் வயல்-மாடு, கொக்கு, நாரைகள் இரை தேடுவதில் போட்டியிடுகின்றன appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Sivagamipuram ,Thanjam district ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்த சிறுவன் மீட்பு