×

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் போராட்டம்

நெல்லை : நெல்லை மாநகர பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பதை கண்டித்து, மணிமூர்த்தீஸ்வரத்தில் கழிவுநீர் பாயும் பகுதியின் நடுவில் இறங்கி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நெல்லை மாநகர பகுதியில் மீனாட்சிபுரம், கைலாசபுரம், மணிமூர்த்தீஸ்வரம், சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணியில் அதிக அளவில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை மூலம் எடுத்துச் செல்லப்படும் கழிவுநீர், தச்சநல்லூர் ரயில்வே கிராசிங் அருகே பம்ப் செய்யப்பட்டு, ராமையன்பட்டி குப்பை கிடங்கு சுத்தகரிப்பு மையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து இந்த கழிவு நீர் மீண்டும் நேரடியாக மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. சிறிய கால்வாய் போல் அப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்த செய்தி தினகரனில் நேற்று வெளியானது.

இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமடைந்த நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரசார், மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மணிமூர்த்தீஸ்வரம் பகுதிக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் அனைவரும் ஆற்றின் நடுவே கழிவுநீர் கலக்கும் பகுதிக்கு சென்று அமர்ந்து போராட்டம் நடத்தினர். கழிவுநீர் கலப்பதால் குடிநீர் மாசுபடுவதோடு, உடலில் தோல்நோய்கள் வருவதாக கூறி அவர்கள் கோஷமிட்டனர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், பரணி இசக்கி, துணைத் தலைவர் மாரியப்பன், மண்டல தலைவர்கள் கெங்காராஜ், பிவிடி ராஜேந்திரன், மானூர் வட்டார தலைவர் பாக்கியகுமார், மாவட்டச் செயலாளர் அனந்த பத்மநாபன், பிரபுசங்கர், ஆன்டனிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கட்சியினரை சமரசப்படுத்தினர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே காங்கிரசார் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Nellai ,Tamiraparani ,Manimurtheeswaram ,
× RELATED எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1...