×

தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள் நாகர்கோவிலில் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி-பஸ்கள் மாற்று பாதையில் இயக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் முன்னறிவிப்பு இல்லாமல் நடந்த பராமரிப்பு பணி காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.நாகர்கோவில் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி, தோவாளை, வெள்ளமடம், ஒழுகினசேரி சந்திப்பு ஆகியவை கடும் போக்குவரத்து நெருக்கடியான பகுதி ஆகும். நாகர்கோவில் நகரின் நுழைவு வாயிலாக உள்ள ஒழுகினசேரி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படாத நிலை உள்ளது.

அதுவும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் முழுமையாக செயல்படும் நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடுமையான நெருக்கடி ஏற்படும். ஒழுகினசேரி சந்திப்பில் ஏற்படும் நெருக்கடி, நாகர்கோவில் நகர் முழுவதுமே பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக வடசேரி அண்ணா சிலை சந்திப்பு, வடசேரி – திருவனந்தபுரம் சாலை, வடசேரி அசம்பு ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நெருக்கடி எதிரொலிக்கும். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல், நாகர்கோவில் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் பராமரிப்பு பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக, நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் நேற்று (செவ்வாய்) காலை நடைபெற்றது. இதனால் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருநெல்வேலி மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்கள், நாகர்கோவில் நகருக்குள் நுழைய முடியாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றன.

இதையடுத்து திருநெல்வேலி மார்க்கத்தில் இருந்து நாகர்கோவில் வர வேண்டிய வாகனங்கள், பஸ்கள், லாரிகள் அனைத்தும் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், இறச்சக்குளம், புத்தேரி வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் புத்தேரி மேம்பாலம் முதல் வடசேரி அண்ணா சிலை சந்திப்பு வரையிலான அசம்பு ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதே போல் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி மார்க்கமாக செல்ல வேண்டிய பஸ்கள், வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டதால், வடசேரி அண்ணா சிலை சந்திப்பு முதல் கிருஷ்ணன்கோவில் சந்திப்பு வரையிலான திருவனந்தபுரம் ரோட்டிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார்கள், ஆட்டோக்கள், வேன்கள், பஸ்கள் என வாகனங்கள் ஒன்றுக்கொன்று செல்ல முடியாமல் சிக்கின. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.

காலை 7 மணி முதல் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் இந்த நெருக்கடி இருந்தது. போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று வாகனங்களை ஒழுங்குப்படுத்தினர். இருப்பினும் நெருக்கடியால் பெரும் பாதிப்பு உண்டானது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, இன்று குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை ஆய்வு செய்கிறார். இதையொட்டி இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

The post தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள் நாகர்கோவிலில் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி-பஸ்கள் மாற்று பாதையில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : National Highway ,Nagarkovil ,Highway ,Dinakaran ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...