×

கோச்சிங் சென்டரில் சேர வசதியில்லை… தொடர்ச்சியாக படித்து வந்தேன் என்கிறார் ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த விவசாயி மகன்-தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்தார்

நாமக்கல் : ஐஏஎஸ் தேர்வில், நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் பணியாற்றி வரும் உதவி பொறியாளரான விவசாயியின் மகன் அகில இந்திய அளவில் 117வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.அகில இந்திய அளவிலான சிவில் சர்விசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் ராமகிருஷ்ணசாமி (28) தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவருக்கு அகில இந்திய அளவில் 117வது இடம் கிடைத்துள்ளது. தமிழக அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம், திருவேங்கடமாகும். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து ராமகிருஷ்ணசாமி கூறியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வில் 117வது இடம் கிடைத்துள்ளது, மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழக அளவில் 2வது இடம் பெற்றுள்ளேன். இதுவரை 4 முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியுள்ளேன். 4வது முறையில் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 4 ஆண்டுகளாக கடுமையாக படித்து வந்தேன். கஷ்டப்பட்டு படித்தால் நிச்சயமாக ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ படித்துள்ளேன். கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என விரும்பினேன். அதற்காக திட்டமிட்டு படித்து வந்தேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று உதவி பொறியாளராக அரசு பணியில் சேர்ந்தேன்.

வேலை நேரம் முடிந்து மற்ற நேரங்களில் தொடர்ச்சியாக ஐஏஎஸ் தேர்விற்கு தயார்படுத்தி வந்தேன். கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு எனக்கு வசதி வாய்ப்பு இல்லை. எனது தந்தை ரங்கராஜ் விவசாயம் செய்து வருகிறார். எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை பட்டதாரி. நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக ஐஏஎஸ் தேர்வு எழுதினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கோச்சிங் சென்டரில் சேர வசதியில்லை… தொடர்ச்சியாக படித்து வந்தேன் என்கிறார் ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த விவசாயி மகன்-தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்தார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Namakkal ,Akila ,Namakkal District Industrial Center ,Dinakaran ,
× RELATED 1 டன் ரேஷன் அரிசியை விற்க முயன்றவர் கைது