×

புதுச்சேரி காந்தி வீதியில் நடுரோட்டில் வண்டிகளை நிறுத்தி மீன் வியாபாரம்-துர்நாற்றம் வீசும் அவலம்

புதுச்சேரி : புதுச்சேரி காந்தி வீதியில் நடுரோட்டில் மீன் வண்டிகளை நிறுத்தி மொத்த வியாபாரிகள் வெளிமாநில மீன்களை வியாபாரம் செய்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஏப்ரல் 15 முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. இருப்பினும் சிறிய படகு, கட்டுமரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு மீன்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு நேரடியாக நேருவீதி பெரிய மீன் மார்க்கெட் பகுதிக்கும் காந்தி வீதிக்கும் எடுத்து வரப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது. நடுரோட்டில் மீன்கள் அடங்கிய பாக்ஸ் பெட்டிகளை போட்டு வியாபாரம் செய்து மீன்களை, சிறுகுறு வியாபாரிகள் பிரித்தெடுப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

சில மொத்த வியாபாரிகள் வெளிமாநிலத்தில் இருந்து வாகனங்களில் வரும் மீன்களை பெட்டி, பெட்டியாக வாங்கி அதை சிறிய வாகனங்களுக்கு மாற்றி நேருவீதி, காந்தி வீதி பகுதிக்கு எடுத்துவந்து நடுரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்வதாகவும், இதனால் அவ்வழியை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே இசிஆரில் உள்ள நவீன மீன் அங்காடியில் மட்டுமே மீன் மொத்த வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது.
ஆனால் இதற்கு மீன் மொத்த வியாபாரிகள், சிறுகுறு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இவ்விவகாரம் மாவட்ட நிர்வாகம் வரையிலும் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post புதுச்சேரி காந்தி வீதியில் நடுரோட்டில் வண்டிகளை நிறுத்தி மீன் வியாபாரம்-துர்நாற்றம் வீசும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Gandhi Road ,Puducherry Gandhi Road ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...