×

கோடைவிழா – மலர் கண்காட்சி நாளைமறுநாள் துவக்கம் கொடைக்கானலுக்கு 25 சிறப்பு பஸ்கள்-ஆய்வுக்குப் பிறகு திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு

கொடைக்கானல் : கோடை விழாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக கொடைக்கானலுக்கு கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.மலைகளின் இளவரசியான‌ திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை கவரும்விதமாக ஆண்டுதோறும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி விழா நடைபெறும். இந்த ஆண்டு கோடைவிழா நாளைமறுநாள் (மே 26) 60வது மலர் கண்காட்சியுட‌ன் துவங்குகிறது. 26, 27, 28 ஆகிய‌ 3 நாட்க‌ள் ம‌ல‌ர் க‌ண்காட்சி விழா ந‌டைபெறுகிறது. ப‌ல்வேறு க‌லை நிக‌ழ்ச்சிக‌ளுட‌ன் ஜூன் 2ம் தேதி வரை 8 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

கோடை விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, மலர் கண்காட்சி விழா மற்றும் கோடை விழா நடைபெறும் பிரைய‌ண்ட் பூங்காவில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் அமரும் இட‌ம், குடிநீர், கழிப்பறை வ‌ச‌திகள் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌தா? பாதுகாப்பு அம்ச‌ங்கள், சிசிடிவி கேம‌ராக்க‌ளின் செயல்பாடுகள், அர‌ங்க‌ங்க‌ள், ஸ்டால்க‌ள் முறையாக‌ அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தா என்பது ெதாடர்பாகவும் ஆய்வு செய்தார். ஏற்பாடுகள் தொடர்பாக பூங்கா நிர்வாக‌ிகளிடம் கேட்டறிந்தார்.

நாளைமறுநாள் துவங்கும் கோடை விழா மலர் கண்காட்சியில் தமிழக அமைச்ச‌ர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, அமைச்சர்களின் நிக‌ழ்ச்சி நிர‌ல் மற்றும் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பூங்கொடி, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிக‌ளிட‌ம் ஆலோசனை செய்தார். பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘‘ம‌ல‌ர் க‌ண்காட்சியை ர‌சிக்க‌ வ‌ரும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ச‌திக்காக‌, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், கூடுதலாக 25 சிற‌ப்புப் பேருந்துக‌ள் இய‌க்க‌ப்ப‌டும்.

வாகன நெரிசலை கட்டுப்படுத்த கூடுத‌லாக‌ போலீசார் நியமிக்கப்படுவர். சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மொபைல் டாய்லட் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படும். நெகிழி பயன்பாட்டை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

ஆய்வில் கொடைக்கானல் ஆர்டிஓ ராஜா, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, தாசில்தார் முத்துராமன், பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வாகனங்கள் பழுதா…? மெக்கானிக் குழு ரெடி

கலெக்டர் பூங்கொடி மேலும் கூறுகையில், ‘‘கோடை விழாவை முன்னிட்டு கூடுத‌லாக‌ தூய்மைப் ப‌ணியாள‌ர்க‌ள் சுழ‌ற்சி முறையில் ப‌ணியில் ஈடுப‌டுத்தப்பட உள்ளனர். ப‌ட‌கு ச‌வாரி செல்லும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்காக‌ பாதுகாப்பு மீட்பு குழு அமைக்கப்படும். ம‌லைச்சாலைக‌ளில் வ‌ரும் வாக‌ன‌ங்க‌ள் ப‌ழுதடைந்தால், உடனடியாக சரி செய்ய தேவையான மெக்கானிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பழுதான வாகனங்களை இந்தக்குழு உடனடியாக சரி செய்யும். இதன் மூலம் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்’’ என்றார்.

The post கோடைவிழா – மலர் கண்காட்சி நாளைமறுநாள் துவக்கம் கொடைக்கானலுக்கு 25 சிறப்பு பஸ்கள்-ஆய்வுக்குப் பிறகு திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Summer Festival ,Flower Exhibition Day ,Kodaikanal ,Dindigul ,Summer ,Kodaikanal—after ,Thindigul Collector ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...