×

தூத்துக்குடி உள்பட 6 ஒன்றியங்களுக்கு ரூ.515.72 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி

தூத்துக்குடி, மே 24: தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியத்தை சார்ந்த குடியிருப்புகளுக்கு ரூ.515.72 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியத்தை சார்ந்த குடியிருப்புகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.515.72 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் -மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கனிமொழி எம்பி, கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.515.72 கோடி மதிப்பிலான இந்த குடிநீர் திட்டத்தின் வழியாக கிட்டத்தட்ட 1 லட்சம் குடும்பங்கள் பயன்பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற நிர்ணயிக்கப்பட்ட 18 மாத காலத்திற்கு முன்பு 12 மாதத்தில் திட்டத்தை முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்ததாரர் கூறியிருக்கிறார். இதன் மூலம் மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி பகுதிகளில் உள்ள 363 கிராமங்களை சேர்ந்த சுமார் 5 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்கப்போகிறது. இதற்காக 62 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 40 கீழ்மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். சாத்தான்குளம், உடன்குடி பகுதிக்கு தனி குடிநீர் திட்டம் வேண்டுமென கலெக்டர் கோர்க்கை வைத்திருக்கிறார். நிச்சயமாக அமைச்சர்களை சந்தித்து இதை செயல்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன், என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்கண்டேயன் (விளாத்திக்குளம்), மாவட்ட பஞ். தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர், மாப்பிள்ளையூரணி பஞ். தலைவர் சரவணக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் (மதுரை) ரகுபதி, மேற்பார்வை பொறியாளர் செந்தூர்பாண்டி, தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post தூத்துக்குடி உள்பட 6 ஒன்றியங்களுக்கு ரூ.515.72 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி appeared first on Dinakaran.

Tags : Unions ,Thoothukudi ,Ottapidaram ,Gayathar ,Kovilpatti ,Pudur ,Vlathikulam Unions ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது