×

மெட்ரோ முதல் கட்ட திட்டத்தில் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல்

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களின் இரண்டு வழித்தடங்கள் மூலம் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2022ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில்களில் 6.09 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், முதல் கட்ட வழித்தடத்தில் பயணிகளின் வசதிகளுக்காக மெட்ரோ ரயில்களில் கூடுதலாக ரயில் பெட்டிகளை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில்: முதல் கட்ட திட்டத்தில் 10,000 பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி சமீப காலங்களில் நாளொன்றுக்கு ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் சிக்னல் அமைப்பு, நடைமேடை திரை கதவுகள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. இது தவிர 6 பெட்டிகளை கொண்ட ரயில்களுக்கு இடமளிக்கும் வகையில் ரயில் நிலையங்களில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும்.

மேலும் கூடுதல் ரயில்கள் வாங்கி அதற்கு ஏற்றவாறு ரயில் நிலையங்களை புதுப்பிப்பதற்கு ஆகும் செலவை விட கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பது குறைந்த செலவாகும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை மாநில மற்றும் ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று பணிகள் முன்னெடுக்கப்படும். மேலும் இந்த திட்டம் ரூ.2800 கோடியில் செயல்படுத்தப்படும். இதற்கான நிதியை பெற சர்வதேச வங்கியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறு மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்தார்.

The post மெட்ரோ முதல் கட்ட திட்டத்தில் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Metro ,Chennai ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய...