×

வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்க கூடாது: சில்லரை விற்பனையாளர்களுக்கு அரசு உத்தரவு

புதுடெல்லி: வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று சில்லரை விற்பனையாளர்களிடம் ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மொபைல் எண்ணை கொடுக்காவிட்டால் சில்லரை விற்பனையாளர்கள் சேவை அளிக்க மறுப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து நீண்ட நாட்களாக புகார்கள் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தின் செயலாளர் ரோகித் குமார் சிங் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, “சில்லரை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் மொபைல் எண்ணை தராவிட்டால் பில் கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர்.

இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தவறான வர்த்தக நடைமுறையாகும். இது குறித்து, சில்லரை வர்த்தக தொழில் கூட்டமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் வாடிக்கையாளர் பில் வாங்குவதற்கு தங்களது மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பது கட்டாயமாக்கப் படவில்லை. ஆனால் வர்த்தக பரிவர்த்தனையை முடிக்க வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண்ணை கேட்பது அவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இது போன்ற பெரும்பாலான சூழல்களில் வாடிக்கையாளர்களுக்கு வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படுவதில்லை. எனவே வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்டு வற்புறுத்த கூடாது,” என்று கூறினார்.

The post வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்க கூடாது: சில்லரை விற்பனையாளர்களுக்கு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Ministry of Consumer Affairs ,
× RELATED ஒரே அரசியலமைப்பு மதம் கோரிய மனு தள்ளுபடி