×

மின்சார வாகனங்கள், மின்கலன்கள் உற்பத்தியில் தமிழ்நாடு அபரிமிதமான வளர்ச்சி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் தகவல்

சென்னை: மின்சார வாகனங்கள், மின்கலன்கள் உற்பத்தி மற்றும் பிற துறைகளில் தமிழ்நாடு அபரிமிதமான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள், பொறியியல், மருந்துகள், ஆடைகள், ஜவுளி, தோல், ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பல தொழிற் துறைகளில் முன்னணியில் உள்ளது. தமிழ்நாடு அரசு வழிகாட்டும் அலுவலகத்தின் மூலமாக ஜனவரி 2022 முதல் ஏப்ரல் 2023 வரை, 108 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் ரூ.1,81,388 கோடி முதலீடு பெறப்பட்டு 1,94,592 வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய வளர்ந்து வரும் துறைகளான விண்வெளி மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகள், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல், சமையல் எண்ணெய் தொழிற்சாலைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கூறுகள் உற்பத்தி, மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, மருத்துவ மின்னணு சாதனங்கள் மற்றும் உபகரணங்கள், மின்சார வாகனங்கள், மின்கலன்கள் உற்பத்தி மற்றும் பிற துறைகளில் தமிழ்நாடு அபரிமிதமான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
2022-23ம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 7,33,296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை 47,14,148 ஆகவும் உயர்ந்துள்ளது. “நான் முதல்வன்’, திட்டம் தொடங்கப்பட்டதன் வாயிலாக 2022-2023 நிதியாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது 1,01,152 மனுதாரர்களுக்கு 30க்கும் மேற்பட்ட துறைகளிலும் முதன்மை திறன் மேம்பாட்டு மையங்களின் வாயிலாக சுகாதாரம், தளவாடங்கள், வங்கி, நிதி, சேவை மற்றும் காப்பீடு துறைகளில் குறுகிய கால பயிற்சிகளை வழங்கியுள்ளது. 1,60,000 திறன் பயிற்சி பெற்றவர்களின் விவரங்கள் தொழிற்சாலைகள் பணியமர்த்தம் செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 4,94,258 பொறியியல் கல்லூரி மாணவர்களும், 8,11,338 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் தற்போதுள்ள மற்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட துறைகளான ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆப் திங்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், இண்டஸ்ட்ரி 4.0, சைபர் செக்யூரிட்டி, பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஸ்மார்ட் எனர்ஜி கிரிட் மற்றும் இதர பிரிவுகளில் வேலைபெறும் திறனை உருவாக்கி நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பினை புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களான சீமென்ஸ், டசால்டு, ஆட்டோடெஸ்க், சிஸ்கோ, ஐபிஎம் போன்றவற்றுடன் இணைந்து வழங்குகின்றன.
திறன் பயிற்சி தவிர, பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை புகுத்துவதற்காக ஐஐடி பாம்பே, ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து ஹேக்கத்தான்கள் நடத்தப்பட்டுள்ளன. 2022-23ம் கல்வியாண்டில் 1,15,682 இறுதியாண்டு பொறியியல் மாணவர்களில் 61,900 மாணவர்கள் முன்னணி தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் இதுவரை பணிநியமனம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் நீண்ட கால திறன் பயிற்சிகள் 102 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 326 தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

2022-2023ம் ஆண்டில், தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்துள்ள 93.46% மாணவர்களில் 25,707 மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் மற்றும் 13,653 மாணவர்கள் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் பயிற்சி பெற்று வருகின்றனர். பொருத்துநர், கடைசலர், பற்றவைப்பவர் போன்ற 54 பொறியியல் பாடப்பிரிவுகளிலும் கணினி வன்பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு, கணினி இயக்குபவர் மற்றும் திட்ட உதவியாளர், உணவு உற்பத்தி, தையல் தொழில்நுட்பம், ஆடை வடிவமைப்பு, சுருக்கெழுத்து போன்ற பொறியியல் சாராத 24 தொழில்துறை ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் உற்பத்தி, மேம்பட்ட சிஎன்சி, உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன், எலக்ட்ரிக் வாகனங்கள், வடிவமைப்பு, கூடுதல் வாகனங்கள், உற்பத்தி, மேம்பட்ட பிளம்பிங், மேம்பட்ட வெல்டிங் மற்றும் மேம்பட்ட ஓவியம் போன்ற அண்மை தொழில்நுட்ப வளர்ச்சித் துறைகளில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க ஏதுவாக தொழில்துறை 4.0 தரநிலை தொழில்நுட்ப மையங்களாக அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மாற்றப்படுகின்றன. 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 4.0 தரநிலை தொழில்நுட்ப மையங்களாக மாற்றும் திட்டம் ரூ.2877.43 கோடி செலவில் டாடா டெக்னாலஜி செயல்படுத்தப்படுகிறது. இதனால், தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைய வழிவகுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 1,46,468 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜூன் 2021 முதல் மே 2023 வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,183 சிறு வேலைவாய்ப்பு முகாம்களையும் 101 பெரிய வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தியுள்ளன. ஆட்டோமொபைல், வங்கி, நிதி நிறுவனங்கள், உற்பத்தி, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பல்வேறு துறைகளைச்சேர்ந்த 25,880 தனியார்துறை நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்றுள்ளன. இதனால், 2,211 மாற்றுத்திறனாளிகள் உட்பட 1,46,468 வேலைநாடுநர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

The post மின்சார வாகனங்கள், மின்கலன்கள் உற்பத்தியில் தமிழ்நாடு அபரிமிதமான வளர்ச்சி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,and Training Department of Employment and Training ,Chennai ,and Training Department of Employment and Training Department ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...