×

அம்பேத்கார், அண்ணா பிறந்தநாள், வாக்காளர் தினம், சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக முதலமைச்சர் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின் கூட்டங்களை ஆண்டுதோறும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் நாள், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஆம் நாள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் நாள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் நாள் ஆகிய நான்கு தினங்களில் நடத்திட வேண்டும் என ஆணையிட்டுள்ளார்கள். நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகத்தில் மக்கள் பங்கேற்பினை உறுதி செய்யும் விதமாக. அவ்வமைப்புகளின் வார்டுகள் ஒவ்வொன்றையும், பகுதிகளாக (Areas) பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும். ஏரியா சபையை (Area Sabha) உருவாக்கும் வகையில், 2010ஆம் ஆண்டு அப்போதைய நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்களில் உரிய வகைமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும், அந்த சட்ட திருத்தங்களின் கீழ்,2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா விதிகள் சபை வெளியிடப்பட்டன. அரசு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகத்தை மேலும் செம்மைப்படுத்துவது தொடர்பாக மேற்கொண்டு வரும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஏரியா சபைகளை அமைத்து நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், முதல் முறையாக, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள், ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்பெற்றன. இவற்றில், பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திலும், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதிகளிலும், மக்கள் தொகையின் அடிப்படையில், மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டையும் நான்கு முதல் பத்து பகுதிகளாகவும், நகராட்சிகளில் நான்கு பகுதிகளாகவும் மற்றும் பேரூராட்சிகளில் மூன்று பகுதிகளாகவும் (Areas) பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஏரியா சபைகளை அமைக்கவும் மற்றும் ஏரியா சபைகளின் கூட்டங்களை நடத்துவது தொடர்பாகவும் தேவையான வகைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்விதிகளின் 180வது விதியின்படி, ஏரியா சபைக் கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. அதாவது, வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும். இதன்படி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின் கூட்டங்களை, ஆண்டுதோறும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் நாள், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஆம் நாள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் நாள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் நாள் ஆகிய நான்கு தினங்களில் நடத்திட வேண்டும் என ஆணையிட்டுள்ளார்கள்.

இதன்மூலம், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி, சபை கூட்டங்கள், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் கிராம நடத்தப்பட்டு வருவதைப் போன்று, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், ஏரியா சபைக் கூட்டங்கள், வருடத்திற்கு நான்கு முறை நிர்ணயிக்கப்பட்டுள்ள நாட்களில் நடத்தப்படவும், இக்கூட்டங்களில் பொது மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு தங்கள் பகுதியின் அடிப்படை வசதி தேவைகள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும், தங்கள் பகுதியின் வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்கவும், மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகத்தில் மக்கள் பங்கேற்பினை உறுதி செய்யவும், அடித்தட்டு ஜனநாயகத்தை வலுப்பெறச் செய்யவும் ஏதுவாகிறது.

The post அம்பேத்கார், அண்ணா பிறந்தநாள், வாக்காளர் தினம், சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Anna ,Voter's Day ,International Human Rights Day ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil ,Nadu ,Councils ,National Voter's Day ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா