×

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓட்டல், கடைகளில் காலாவதியான சமையல் எண்ணெய், கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்து அழிப்பு

* திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள் அதிரடி

* வாழை இலையில் உணவு பரிமாற உத்தரவு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் 22 இடங்களில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்ததில் காலாவதியான சமையல் எண்ணெய் 50 லிட்டர் பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டல்களில் வாழை இலையில் உணவு பரிமாற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில் மற்றும் திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருப்பத்தூர் அடுத்த கந்திலி, கெஜல் நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டீக்கடை, ஓட்டல்கள், பலசரக்கு மளிகை கடை, உள்ளிட்ட 22 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் கந்திலியில் சூப்பர் மார்க்கெட் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் காலாவதியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மொத்தம் 50 லிட்டர் சமையல் எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். அதனைத் தொடர்ந்து அருகே உள்ள டீக்கடையில் டீ தூளை ஆய்வு செய்தபோது கலப்பட டீத்தூள் பயன்படுத்தி பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட தெரியவந்தது. அந்த 5 கிலோ டீத்தூள் பறிமுதல் செய்து கொட்டி அழித்தனர். மேலும் அதே பகுதியில் சிக்கன் பக்கோடாவிற்கு அதிக வர்ணம் பூசி பொரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதில் 5 கிலோ சிக்கன் பக்கோடா பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் கந்திலி பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல் கடைகளில் வாழையில் உணவு பரிமாற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர். பல்வேறு கடைகளில் கடைகளில் ஆய்வு செய்து அங்குள்ள உணவுகள் மற்றும் எண்ணெய், உள்ளிட்டவைகளை எடுத்து சோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி கூறுகையில், ‘மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலம் மாதந்தோறும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தற்போது 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சாலையோரத்தில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் தரமான எண்ணெய்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு உணவுகளை விற்பனை செய்ய வேண்டும். அதேபோல் டீக்கடைகளில் மரத்தூள் புளியங்கொட்டை தூள் உள்ளிட்டவை கலப்படம் செய்து டீ விற்பனை செய்து வருகின்றனர். அவர்களையும் பிடிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோல் மக்கள் சாப்பிடும் உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

கடைகளுக்கு அபராதம் விதிப்பு

கந்திலி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய ஆய்வில் 2 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அந்த கடைகளுக்கு தலா ₹2000 விதம் மொத்தம் ₹4 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் தடை ெசய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

சிரஞ்சு சாக்லேட் விற்றால் கைது

சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிரஞ்சு வடிவத்தில் இருக்கும் சாக்லெட்டுகள் விற்பனை தற்போது அதிகளவில் உள்ளது. இவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. எனவே இந்த சாக்லேட்டுகளை தயாரித்து, கடைகளுக்கு யாராவது விநியோகம் செய்கிறார்களா? என கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சிரஞ்சு சாக்லெட்டுகளை யாராவது விற்பனை செய்தால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓட்டல், கடைகளில் காலாவதியான சமையல் எண்ணெய், கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்து அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Thirupattur district ,Thiruppattur ,Tirupattur district ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...