×

கிருஷ்ணகிரியின் அடையாளமாக மாறிய மாங்கனி கண்காட்சி விரைவில் துவக்கம்-முன்னேற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அடையாளமாக திகழும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி விரைவில் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை வேளாண் துறை அதிகாரிகள் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றனர்.கிருஷ்ணகிரி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மாம்பழம். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்த போது, சேலத்து மாம்பழம் என்ற சிறப்பு பெற்றாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் மா விவசாயத்திற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. கிருஷ்ணகிரியின் முக்கிய பயிரான மா சாகுபடி, சுமார் 44 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மாவட்டம் முழுவதும் நடக்கிறது.

குறிப்பாக சந்தூர், தொகரப்பள்ளி, மத்தூர், போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், பர்கூர் உள்ளிட்ட பகுதியில் அதிகளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2.50 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய் உற்பத்தியும் நடக்கிறது. மா உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளது. மேலும், மாங்காய்களின் விலை நிர்ணயமும் இம்மாவட்டத்தில் தான் நடக்கிறது. இதை வைத்தே மற்ற மாவட்டங்களில் மாங்காய் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் கிடைக்கும் மாங்காய்களில், 70 சதவீதம் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் நடக்கிறது. இதன் மூலம், அரசுக்கு அந்நிய செலவாணியாக சுமார் ₹600 கோடி கிடைக்கிறது. அத்துடன் மாம்பழம் பதப்படுத்தும் தொழிலும் வளர்ந்து வருகிறது. பெங்களூரா, செந்தூரா, மல்கோவா, அல்போன்சா, பங்கனப்பள்ளி என நம் எண்ணத்தில் தோன்றும் மாம்பழங்களின் உற்பத்தி மண்டலமாக விளங்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சந்தூர் பகுதிகளில், மா ஒட்டு முறையில் மா செடிகள் வளர்க்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இம்மாவட்டத்தின் சிறப்பு மிக்க மா விவசாயத்தை போற்றும் வகையிலும், இதுகுறித்து மற்ற மாநில மா விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், கிருஷ்ணகிரியில் கடந்த 1992ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. கிருஷ்ணகிரியில், தற்போது தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைந்து, 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை நடத்த முடிவு செய்துள்ளது. கண்காட்சி நடக்கும் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வையும் முடித்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி என்றாலே மாங்கனி தான் அனைவரின் நினைவுக்கும் வரும். அதனை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், அகில இந்திய அளவில் விளைவிக்கப்பட்ட மாங்கனிகள் காட்சிப்படுத்தப்படும். சிறந்த முறையில் மா விளைச்சலை கொடுத்த விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும், மற்ற மாநிலங்களில் மா விவசாயத்தில் உள்ள புதிய தொழில்நுட்ப முறைகள், புதிய வகை மா ரகங்களை வளர்ப்பதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளன. மா விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், வேளாண்துறை அறிஞர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கவுள்ளனர். மாங்கனி கண்காட்சியை, சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, பெரிய அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் இல்லை. எனவே, இங்கு கோடை விடுமுறை காலத்தில் நடக்கும் மாங்கனி கண்காட்சியில், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்துச் செல்வர். கண்காட்சி நடக்கும் 30 நாட்களும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் என மக்களின் மனதை இலகுவாக்கும் அனைத்து அம்சங்களும் அமைக்கப்படுவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கண்காட்சிக்கு வந்து செல்வர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை சில வாரங்கள் மட்டுமே இருப்பதால், மாணவர்களின் கல்வி சுமை கூடும் முன்பாக, விடுமுறை கொண்டாட்டத்துடன் சேர்த்து மாங்கனி கண்காட்சியையும் கண்டு மகிழ வேண்டும் என்பதற்காக, அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

The post கிருஷ்ணகிரியின் அடையாளமாக மாறிய மாங்கனி கண்காட்சி விரைவில் துவக்கம்-முன்னேற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,All India Mangani Exhibition ,Mangani Exhibition ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்