×

குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு புத்தன் அணை தண்ணீர் வருவதில் தாமதம்-திறந்து 10 நாட்கள் ஆகியும் சுத்திகரிப்பு நிலையம் வரவில்லை

நாகர்கோவில் : புத்தன் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 10 நாட்கள் ஆகியும் இன்னும், கிருஷணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை வந்து அடையவில்லை. இடையே, இடையே குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வருவதால் சரி செய்யும் பணி நடக்கிறது.நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணை தண்ணீர் போதுமானதாக இல்லாததால், கோடைகாலங்களில் வருடம் தோறும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய பேச்சிப்பாறை அணையில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ₹251 கோடியே 43 லட்சம் ெசலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சி வந்த பின், இந்த பணிகள் வேகப்படுத்தப்பட்டது. மேயர் மகேஷ் இது தொடர்பாக அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை மேற்கொண்டார். அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் தர் ஆகியோரும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு விரைவில் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என உத்தரவிட்டனர். இதையடுத்து பணிகள் வேகமாக நடந்து வந்தன.

இந்த திட்டத்துக்காக புத்தன் அணையில் இருந்து 33 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர மாநகர பகுதிக்குள் 420 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் அளவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. புத்தன் அணையில் நீர் உந்து நிலையம், நீர் எடுக்கும் கிணறு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிக்காக கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் மேலும் அதிக கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது.

இதனைதவிர மாநகர பகுதியில் ஏற்கனவே 12 மேல்நிலை நீர்தேக்கதொட்டிகள் உள்ளன. தற்போது கூடுதலாக 11 மேல்நிலை நீர்தேக்கதொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. புத்தன் அணை குடிநீர் திட்டபணியை மே மாதம் இறுதிக்குள் முடித்து விட்டு ஜூன் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் வேகமாக பணிகள் நடந்து வருகிறது. மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் தண்ணீர் திறக்கும்போது நேரடியாக வீடுகளுக்கு தண்ணீர் வரும் வகையில் புவிஈர்ப்பு விசையின் அடிப்படையில் வேலைகள் நடந்து வருகிறது.

புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 900 எம்.எம். விட்டம் கொண்ட ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் புத்தன் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு சோதனை செய்யும் பணி கடந்த 12ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் திறக்கப்பட்ட தண்ணீர், 9 கிலோ மீட்டர் தூரமும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் வந்தது. அதன் பின்னர் ஆங்காங்கே குழாய்களில் உடைப்பு ஏற்பட தொடங்கியது.

இதனால் நேற்று வரை கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இந்த தண்ணீர் வந்து சேர வில்லை. இதற்கிடையே ஆங்காங்கே குடிநீர் புதிதாக போடப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதை சரி செய்யும் பணிகள் நடக்கின்றன. உடைப்பை சரி செய்யும் வகையில் 3 கி.மீ. இடைவெளியில் அடைப்பான்கள் உள்ளன. இதையடுத்து அடைப்பான்கள் மூலம் தண்ணீர் நிறுத்தப்பட்டு உடைப்புகள் சரி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை இறச்சக்குளம் வரை இந்த தண்ணீர் வந்தது.

ஆனால் இறச்சக்குளம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது. இது குறித்து அறிந்ததும் அதிகாரிகள் இடைப்பட்ட தூரத்தில் உள்ள அடைப்பான்கள் மூலம் தண்ணீரை நிறுத்தி உடைப்பை சரி செய்து வருகிறார்கள். இறச்சக்குளத்தை தண்ணீர் நெருங்கி விட்டதால், உடைப்பு சரி செய்யப்பட்டதும், கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை புத்தன் அணை தண்ணீர் வந்து அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடைப்பு ஏற்படாமல் இருந்தால் இன்னும் இரு தினங்களில் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தை தண்ணீர் வந்தடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

The post குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு புத்தன் அணை தண்ணீர் வருவதில் தாமதம்-திறந்து 10 நாட்கள் ஆகியும் சுத்திகரிப்பு நிலையம் வரவில்லை appeared first on Dinakaran.

Tags : Budhan Dam ,Krishnan temple ,
× RELATED புத்தன் அணையில் இருந்து தினமும் 420 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம்