×

இடைப்பாடியில் ஆலங்கட்டி மழை சூறைக்காற்றுக்கு வீட்டின் கூரை விழுந்து விவசாயி பலி-100 ஆண்டு பனைமரம் சாலையில் சாய்ந்தது

இடைப்பாடி : இடைப்பாடி அருகே நேற்று மாலை சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அரசிராமணியில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் விவசாயி உயிரிழந்தார். அயோத்தியாப்பட்டணம் அருகே குள்ளனூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பனை மரம் முறிந்து சாலையில் விழுந்ததால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. குள்ளம்பட்டியில் 3 தென்னை மரங்கள் மின்னல் தாக்கியதில் தீ பிடித்து எரிந்தது. பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சோளப்பயிர், பருத்தி செடிகள் காற்றுக்கு வயலில் சாய்ந்தன. வீடுகளில் விழுந்த ஆலங்கட்டிகளை எடுத்து சிறுவர்கள் விளையாடினர். கனமழையால் தாழ்வான பகுதியிலும், சாக்கடை கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் வாழை, பப்பாளி, வேப்பமரங்கள் முறிந்தும், வேருடனும் சாய்ந்தன.

இடைப்பாடி அடுத்த அரசிராமணி கல்லப்பாளையம் மாமரத்துகாட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(56). இப்பகுதியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்த போது, கூரை வீட்டினுள் இருந்த ஆறுமுகம் மீது, மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, கூரையை அகற்றி விட்டு பார்த்த போது, ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து தேவூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேபோல், இடைப்பாடி அடுத்த நைனாமலை சரபங்கா ஆற்றினுள் மின்கம்பம் உள்ளது. மழையின் போது வீசிய சூறைக்காற்றுக்கு 2 மின்கம்கம்பர்கள் ஆற்றினுள் சாய்ந்து விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்ைத நிறுத்தி, சாய்ந்து கிடந்த கம்பத்தை சரி செய்து, மின்சாரம் வழங்கினர்.அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. பல கிராமங்களில் சூறைக்காற்றுக்கு ஓட்டு வீடுகளில் சேதமடைந்ததது. குள்ளம்பட்டி அருகே சேலம் – அரூர் நெடுஞ்சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பனை மரம் ஒன்று, மழையின் போது வீசிய சூறைக்காற்றுக்கு சாலையில் விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக அப்ேபாது வாகனங்கள் செல்லாததால் அசம்பாவிதம் நடைபெறவில்லை. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கலா ப்ரியா பழனிசாமி, வீராணம் போலீசார், சாலையில் கிடந்த பனை மரத்தை அகற்றி போக்குவரத்து சீர்செய்தனர்.

மரம் விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம்

சேலத்தில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வானில் கருமேகக்கூட்டங்கள் கூடியது. பின்னர் பலத்த காற்றுடன் அரை மணிநேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. இம்மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் சேலம் கோரிமேடு மகளிர் கலைக்கல்லூரி நுழைவு வாயில் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. மரம் விழுந்ததில் மூன்று மின்கம்பங்கள் சேதமடைந்து சாலையிலேயே விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து சாலையில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

The post இடைப்பாடியில் ஆலங்கட்டி மழை சூறைக்காற்றுக்கு வீட்டின் கூரை விழுந்து விவசாயி பலி-100 ஆண்டு பனைமரம் சாலையில் சாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Etappadi ,Eadhapadi ,Arasiramani ,Ethipadi ,Dinakaran ,
× RELATED மின்சாரம் தாக்கி தொழிலாளி காயம்