×

இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், காம்பியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனமே உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகள் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், ஜூன் 1 2023 முதல் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனை செய்யப்படுவது அவசியமாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, குவாஹாட்டி ஆகிய நகரங்களின் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் தங்களின் மருந்து தயாரிப்புகளை முறையாக ஒன்றிய அரசு ஆய்கங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் முன் மருந்தின் மாதிரியை குறிப்பிட்ட ஆய்வங்களுக்கும் அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். ஆய்வகங்கள் தரத்தை உறுதிசெய்த பிறகே இருமல் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

 

The post இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Union Govt. Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...