×

விடுதலைப் பயணம்!

கிறிஸ்துவம் காட்டும் பாதை

உலக அளவில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தி வந்த போராட்டங்களின் விளைவுதான் எட்டு மணிநேர வேலை, வாரவிடுப்பு, மற்றும் பிரசவ விடுப்பு முதலிய இதர விடுப்புகள், மாதஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, ஊக்கத்தொகை, விபத்துக்காப்பீடு இழப்பீடு முதலியன. ஆனால் தற்போது கார்ப்பரேட் முதலாளித்துவத்தினால் படிப்படியாக எல்லா உரிமைகளும் பறிபோய்க் கொண்டு வருகிறது. தொழிலாளர்கள் மீது கடவுள் கொண்ட அக்கறை.

எபிரேயர்களென்று அழைக்கப்பட்ட இஸ்ரவேலர்களின் வாழ்வில் கடவுள் தொழிலாளர்களை விடுவித்த தொழிற்சங்கத் தலைவர் போன்றே அவர்களுக்கு அறிமுகமாகின்றார்.  எகிப்திலிருந்து அஞ்சி ஓடி வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மோசேயைக் கடவுள் சந்திக்கின்றார். அவர் மோசேயிடம் ‘‘எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும்கேட்டேன்; ஆம்! அவர்களின் துயரங்களை நான் அறிவேன்’’. (விடுதலைப் பயணம் 3:7). ‘‘எகிப்தியரின் பிடியிலிருந்து விடுவிக்கவும்…அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்’’ (3:8).

கடவுள் பற்றிய மிக உயரிய சிந்தனைகளை இப்பகுதி நமக்கு எடுத்துரைக்கிறது. அடிமைகளாக்கப்பட்ட எபிரேய மக்கள், தொழிலாளர்கள் மீது கடவுள் காட்டிய அக்கறை அவர் எப்படிப்பட்டவர்கள் மீது கரிசனையுள்ளவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

1) ‘‘என் மக்கள்’’ (My people) கடவுள் யாரை அழைக்கிறார். எகிப்து நாட்டு அரசரின் பாதுகாப்போடு குடியேறிய இஸ்ரவேலர்கள் காலப்போக்கில் அடிமைகளாக்கப்பட்டு கொடுந்துயருக்கு ஆளானார்கள். இவ்வாறு அடிமைகளாக்கப்பட்டவர்களையே கடவுள் என் மக்கள் என அழைத்துச் சொந்தம் கொண்டாடுகிறார்.

2) இஸ்ரவேல் மக்கள் ஒரு பேரினமாக இருந்தனர் என்றாலும் கடவுள் ஒரு இனவிடுதலையை முன்னெடுத்தார் எனக் கூறமுடியாது. ஏனென்றால் இந்த இஸ்ரவேலரின் விடுதலையோடு ‘‘மேலும் பல இனத்தினரும்’’ விடுதலை பெற்று எகிப்தை விட்டு வெளியேறினர். இதனால் இது ஒடுக்கப்பட்ட அனைவரின் விடுதலையாகக் கொள்ள வேண்டியுள்ளது.

3) கடவுள் ஒடுக்கப்பட்டவர்கள் எழுப்பும் குரல்களுக்கு செவிமடுக்கின்றார். அவர்களின் துயரங்களை அறிகின்றார். பாதுகாப்பான நிலையில் இருந்து கடவுளை நம்புவோர் தினமும் பாடும் புகழ்பாக்களைக் காட்டிலும் இவ்வாறு ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் கூக்குரல் கடவுளை உடன் சென்றடைகிறது.

4) கடவுள் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களைக் கண்டு பார்வையாளராக இருப்பதில்லை. மாறாக அதற்கான தீர்வு என்ன என்பதைக் கண்டறிந்து அந்தத் தீர்வை ஒடுக்கப்பட்ட மக்களே அடைவதற்கு அவர்களுக்கு உணர்வையும் வழிகாட்டுதலையும் அளிக்கின்றார்.

5) மேலும், இத்தகையதொரு சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்குத் தலைமை ஏற்கவும் சரியான ஒரு நபரை அடையாளம் கண்டு அவரிடம் பொறுப்பையும் ஒப்படைத்து விடுதலைப் பணியை நிறைவேற்றுகின்றார். இப்பணிக்கு கடவுள் மேசேயுடன் உரையாடி அவருக்கு நம்பிக்கையூட்டி ஆற்றல்படுத்தி பொறுப்பேற்கச் செய்தார்.

6) இதன் காரணமாக சுமார் 430 ஆண்டுகால அடிமை வாழ்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இஸ்ரவேல் மக்கள் தங்கள் விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

7) அது மட்டுமல்ல இஸ்ரவேல் மக்கள் கடவுளின் திட்டத்தின்படி எகிப்திலிருந்து வெளியேறிய அன்று இரவு ஆண்டவர் விழிந்திருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இது கடவுள் மக்கள் விடுதலை அடைவதில் கொண்டிருந்த பேரார்வம் மற்றும் ஆழ்ந்த கவலையை உணரமுடிகிறது.

8) இந்த விடுதலை கடவுளுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. கடவுள் தமது மக்களுக்குப் பத்துக் கட்டளைகளை வழங்கியபோது ‘‘நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்’’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார். (விடுதலைப் பயணம் 20:1-2).

9) மேலும், இந்த விடுதலை சாதாரணமானது அல்ல அது தலைமுறைதோறும் நினைவுகூர்ந்து கொண்டாடப்படவேண்டிய ஒரு பெரும் பண்டிகை எனவும் கூறினார் (விடுதலைப் பயணம் 12: 14-20). இவ்வாறு தான் பாஸ்காப் பண்டிகை உருவானது.

இவற்றை நோக்கும் போது கடவுள் அடிமைத் தனத்தை விரும்புகிறவர் அல்ல என்பதும் விடுதலையை ஊக்கப்படுத்தி உடனிருப்பவர் என்பதும் குறிப்பாகத் தொழிலாளர்கள் உரிமையுடன் வாழ்வதையே அவர் விரும்புகிறார் என்பதும் தெரிகிறது.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post விடுதலைப் பயணம்! appeared first on Dinakaran.

Tags : Christianity ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...