×

திருமணத்தடை நீக்கும் முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள்!

வரலாற்று சிறப்புமிக்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் முசுகுந்தபுரி என்று புராணங்களில் அழைக்கப்பட்டு, இன்று முசிறி என்று அழைக்கப்படும் பசுமை நிறைந்த ஊரில், அக்ரஹாரத்தில், சுமார் 300 ஆண்டு களுக்கு முன்பு, முசுகுந்த சோழன் இருந்த காலத்தில் கட்டப்பட்டது லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். இந்தத் தலத்தில் பெருமாள், லட்சுமி தேவியை இடது தொடையில் அமர்த்திக்கொண்டு, இடது கையால் அணைத்தபடி வலது கையால் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமருளும் படி, அபய ஹஸ்தம் கொண்டு அருள் புரிகிறார்.

இத்திருக்கோயில், சுக்கிர தலமாக விளங்குகிறது. திருமணத்தடை, குழந்தைப் பேறுக்காக இங்கு பரிகாரம் செய்து பக்தர்கள் பலன் பெறுகிறார்கள். இத்திருத்தலத்தில் பாதம் பதித்த பல ஆன்றோர்கள், ஆச்சாரியர்கள் லட்சுமி தேவியுடன் இருக்கும் பெருமாளை, ஏழு வாரங்கள் 12 முறை சுற்றி வந்தால் நினைத்த காரியம் உடனே நிறைவேறும் என்று அருளி இருக்கிறார்கள். இத் திருத்தலத்தில் கருடன் மற்றும் ஆஞ்சநேயர் எதிரெதிர் நின்று சேவை சாதிப்பது மற்றொரு சிறப்பு.

திருவரங்கம் பண்டரிபுரம் ஆண்டவன் சுவாமிகளால் இங்கு சக்கரத்தாழ்வார் மற்றும் யோகநரசிம்மர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வியாபாரத்தடை, கடன் தொல்லை, தொழில் தடை, எதிரிகளால் ஏற்படும் பயம், வேலையின்மை போன்றவற்றை நீக்கி வாழ்வில் வளம் சேர்ப்பார் இந்த பெருமாள். இந்தத் திருத்தலத்தில் பிரதி மாதம் அமாவாசை அன்று மூலவருக்கு திருமஞ்சனமும், திருவோணம் நட்சத்திரத்தில் எல்லாத் தடைகளையும் உடைக்கும் “சுதர்சன ஹோமமும்” நடைபெறும்.

சக்கரத்தாழ்வாருக்கு சித்திரை நட்சத்திரத்தன்றும்; சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ காலங்களில் நரசிம்ம சுவாமிக்கு திருமஞ்சனமும் நடைபெறும். வருடாந்திர திருவிழாவாக கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதம் நவராத்திரி அன்று பத்து நாட்கள் உற்சவம், பங்குனி மாதம் பிரம்மோற்சவம் பத்து நாட்கள் என இங்கு விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை முதல் இரவு வரை பிரசாதம் விநியோகம் பக்தர்களின் உதவியுடன் செய்யப்படுகிறது.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை சனிக்கிழமைகளில் காலை 7 முதல் 12:30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தொகுப்பு: இரா.அமிர்தவர்ஷினி

The post திருமணத்தடை நீக்கும் முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள்! appeared first on Dinakaran.

Tags : musiri lakshmi narayanapa perumal ,Tiruchirappalli district ,Trichy ,Namakkal highway ,Musukunthapuri ,Muziri Lakshmi Narayanab Perumal ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...