×

இந்தப் பயணம் வெற்றிகரமாக முடியும்; அதிக முதலீடுகள் தமிழகத்திற்கு வரும்: வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: சிங்கப்பூர் பயணத்தின்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் முதலமைச்சர் வந்தடைந்தார்.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி செய்திகள் பிரதிநிதிகளும் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறேன். ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. முதலீடுகளை ஈர்க்க 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறேன்.

அங்கு தொழிலதிபர்களை சந்திக்கவுள்ளேன். வெளிநாடு பயணத்தின்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இந்தப் பயணம் வெற்றிகரமாக முடியும்; அதிக முதலீடுகள் தமிழகத்திற்கு வரும். கடந்த முறை துபாய் பயணத்தின்போது கிடைக்கப்பெற்ற ரூ.6100 கோடி முதலீடுகள் மூலம் 15,000 வேலை வாய்ப்புகள் உருவாகின. 6 நிறுவனங்களில் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் ரூ.2.95 லட்சம் கோடி முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளில் 4.12 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

The post இந்தப் பயணம் வெற்றிகரமாக முடியும்; அதிக முதலீடுகள் தமிழகத்திற்கு வரும்: வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CM Stalin ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Singapore ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...