×

விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழப்பு 12 பேர் மீது கொலை வழக்கு பதிந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

விழுப்புரம், மே 23: மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயரிழந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு அருகே சித்தேரி ஆகிய இரண்டு இடங்களில் விஷச்சாராயம் குடித்ததில் மரக்காணத்தில் 14 பேரும் செங்கல்பட்டில் 8 பேரும் என மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து படிப்படியாக வீடு திரும்பி வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து காவல்துறை அதிகாரியுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், விழுப்புரம் எஸ்பி மற்றும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனிடையே மரக்காணம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மற்றும் சென்னையில் இருந்து வந்த மெத்தனால் என்ற விஷச்சாராயத்தை குடித்து உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து சாராய வியாபாரிகள் அமரன்(28), முத்து(38), ஆறுமுகம்(46), ரவி(56), மண்ணாங்கட்டி(57), குணசீலன்(41) கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை ராஜா(எ)பர்கத்துல்லா(51), வில்லியனூர் ஏழுமலை(50), சென்னை திருவேற்காடு இளையநம்பி(46) உள்ளிட்ட மொத்தம் 12 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர். இதனிடையே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி ஐஜி ஜோஷிநிர்மல்குமார், எஸ்பி முத்தரசி உள்ளிட்டவர்கள் விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடத்தினர்.

மரக்காணம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், சிபிசிஐடி விசாரணை அதிகாரியான கூடுதல் எஸ்பி கோமதியிடம் நேற்று ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே மரக்காணம் காவல் நிலையத்திலிருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில், சில ஆவணங்கள் இல்லை என்றும், அவற்றை ஒப்படைக்குமாறு மரக்காணம் காவல் நிலைய போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இன்று சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழப்பு 12 பேர் மீது கொலை வழக்கு பதிந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Villupuram CBCID police ,Villupuram ,Marakkanam ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...