×

திருக்கனூர் அருகே இன்ஸ்பெக்டர் வீட்டை உடைத்து நகை, பணம் துணிகர கொள்ளை

திருக்கனூர், மே 23: புதுச்சேரி திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம் (48). புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகிறார். அவ்வப்போது திருக்கனூர் செட்டிப்பட்டில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவரது தம்பி சரவணன் இந்த வீட்டை பராமரித்து வருகிறார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் இரவு மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க இரும்புக் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே இருந்து 7 ஆயிரம் ரொக்கப்பணம், 4 கிராம் தங்க நகைகள், சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த அவரது தம்பி சரவணன் பின்கதவு உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய மோப்பநாய், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இன்ஸ்பெக்டர் வீட்டில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருக்கனூர் அருகே இன்ஸ்பெக்டர் வீட்டை உடைத்து நகை, பணம் துணிகர கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thirkanur ,Thirukanur ,Chettipattu, Mettutheru ,Thirukanur, Puducherry ,Puducherry ,Tirukanur ,
× RELATED பிறந்து 5 நாட்களில் இறந்த பச்சிளம்...