×

காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியை வரும் கல்வியாண்டில் அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை

 

திருப்பரங்குன்றம், மே 23: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல்கலைக்கழக கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஆண்டிபட்டி, கோட்டூர், வேடசந்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம் ஆகிய 6 இடங்களில் உறுப்பு கல்லூரிகளும், மதுரை தல்லாகுளத்தில் பல்கலைக்கழக கல்லூரியும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உட்பட 7 கல்லூரிகளும் அரசு கல்லூரிகளாக இந்த ஆண்டுக்குள் மாற்றப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து தல்லாகுளத்தில் செயல்படும் பல்கலைக்கழக கல்லூரியை தவிர மற்ற 6 இடங்களில் செயல்பட்ட உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டு விட்டது. ஆனால் மதுரை தல்லாகுளத்தில் செயல்படும் பல்கலைக்கழக கல்லூரி மட்டும் இன்னும் அரசு கல்லூரியாக மாற்றப்படவில்லை. இந்த கல்லூரியில் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளியில் படிப்பு முடித்து உயர்கல்வி தொடரும் ஏழை மாணவர்கள் அதிகம் படிக்க வருகின்றனர். எனவே அரசு கல்லூரியாக மாற்றினால் கல்வி கட்டணத்தில் பெருமளவு மாணவர்களுக்கு சலுகை கிடைக்கும்.

இதனால் இங்கு படிக்கும் கிராமப்புற மாணவர்கள் பயனடைவர். மேலும் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும். எனவே இந்த பல்கலைக்கழக கல்லூரியை இந்த கல்வியாண்டில் அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உயர்கல்வி துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியை வரும் கல்வியாண்டில் அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kamaraj University College ,Thiruparangunram ,University College ,Madurai Kamaraj University ,Dinakaran ,
× RELATED கொரியர் வேன் கவிழ்ந்து டிரைவர் பலி...