×

திருவொற்றியூர் பேசின் சாலையில் சிதிலமடைந்த நிழற்குடை அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை


திருவொற்றியூர்: திருவொற்றியூர் பேசின் சாலையில் சிதிலமடைந்து காணப்பட்ட நிழற்குடை, தினகரன் செய்தி எதிரொலியாக இடித்து அகற்றப்பட்டது. இங்கு, புதிய நிழற்குடை அமைக்கப்படும் என்று மண்டலக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் பேசின் சாலையில் உள்ள எல்லையம்மன் கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடை சிதிலமடைந்து, ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இடிந்துவிழும் நிலையில் இருந்தது. இதனால், இந்த நிழற்குடையை பாதுகாப்பற்ற முறையில் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். எனவே, இதனை இடித்துவிட்டு புதிய நிழற்குடையை அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்த புகைப்படம் கடந்த 2 தினங்களுக்கு முன், தினகரன் நாளிதழில் வெளியானது. அதன்பேரில், உதவிப் பொறியாளர் குணசேகரன் தலைமையில், திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் நேற்று காலை எல்லையம்மன் கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதுகுறித்து மண்டலக்குழுத் தலைவர் தி.மு.தனியரசு கூறுகையில், ‘‘திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் ரூ.12 லட்சம் செலவில் நவீன நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டு, இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது இடிக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் ஓரிரு தினங்களில் புதிய நவீன நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் துவங்கும்,’’ என்று தெரிவித்தார்.

The post திருவொற்றியூர் பேசின் சாலையில் சிதிலமடைந்த நிழற்குடை அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur Basin Road ,Tiruvottiyur ,Thiruvottiyur Basin Road ,Dhinakaran ,Dinakaran ,
× RELATED சாலையோர கடையில் விற்கப்பட்ட...