×

ரயில்வே ஊழியர்களை வெட்டி பைக், செல்போன்கள் பறிப்பு: 3 பேருக்கு வலை

பெரம்பூர்: சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (20). இவரது நண்பர் ராஜேஷ் (21). இவர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேர ஊழியர்களாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வேலைக்குச் சென்றுவிட்டு, நேற்று அதிகாலை 3 மணியளவில் பட்டாளம் பகுதிக்கு இருவரும் பைக்கில் வந்தனர். அங்குள்ள இவர்களது நண்பர் நரசிம்மா என்பவரைப் பார்ப்பதற்காக பேசின்பாலம், யானைகவுனி ரோடு மின்வாரியம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த பைக்கை, 3 மர்ம நபர்கள் மடக்கி, பணம், செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர்.

அப்போது, பிரகதீஸ்வரன் கூச்சல் போட்டதால், ஆத்திரமடைந்த அவர்கள் அவரை கத்தியால் வெட்டி, பைக், 28 ஆயிரம் மதிப்புள்ள பிரகதீஸ்வரனின் செல்போன், ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள ராஜேஷின் செல்போன் மற்றும் ரூ.4,000 ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகதீஸ்வரன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பேசின்பிரிட்ஜ் போலீசார் மர்ம நபர்கள் சென்ற வழியில் சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் ராஜாதோட்டம் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். போலீசாரைப் பார்த்ததும் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து பைக்கை மட்டும் பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் தேடி வருகின்றனர்.

The post ரயில்வே ஊழியர்களை வெட்டி பைக், செல்போன்கள் பறிப்பு: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Railway ,Perambur ,Pragatheeswaran ,Chaugarpet ,Rajesh ,
× RELATED சென்னை வில்லிவாக்கத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவர் கைது!!