×

மக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஜூனில் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனைய பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எனவே, ஜூன் இறுதிக்குள் பஸ் முனையம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், முடிச்சூர், சென்னை வெளிவட்டச் சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்தினை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதை தொடர்ந்து, முடிச்சூர், சீக்கனான் ஏரியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், முடிச்சூர், ரங்கா நகர் குளத்தினை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஈஸ்வரி நகரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைப்பது தொடர்பாகவும், ஆலந்தூர், புது தெருவில் ரூ.10கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் அமைப்பது தொடர்பாகவும் நேரில் சென்று கள ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை முதல்வர் விரைவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றுடன் 28 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம். மீதமுள்ள 6 இடங்களையும் இந்த மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்வோம். மேம்பாலங்களுக்கு கீழிருக்கின்ற பகுதிகளை அழகுபடுத்துதல், உடற்பயிற்சி கூடங்கள் அமைத்தல், வகுப்பறைகள் கட்டித் தருதல், திருமண மண்டபங்கள் ஏற்படுத்தி தருதல், அதோடு சலவைக் கூடங்களை மேம்படுத்தி தருதல், பேருந்து முனையங்களை மேம்படுத்தித் தருதல் என்று பல்வேறு வகையான பணிகளை இந்த 34 பணிகளில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இவற்றை 3 மாதத்திற்குள்ளாக தொடங்க திட்டமிட்டு, தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதேபோன்று, தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்த முடிச்சூர், சென்னை வெளிவட்டச் சாலையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.29 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் கணக்கிடாமல் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. ஆகவே, இந்த பேருந்து நிலையத்திற்கு உண்டான அணுகு சாலைகள், அதேபோன்று இந்த பேருந்து நிலையத்திற்கு வருகின்ற போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு உண்டான திட்டமிடல் போன்றவற்றைவகளை கணக்கிட்டு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றோம்.

ஜூன் மாத இறுதிக்குள் இதை தொடங்க வேண்டுமென்ற நிலைபாடு இருந்தாலும், பேருந்து முனையம் தொடங்கப்பட்ட பிறகு மக்களுடைய தேவைகள் எவையும் விட்டு விடாமல் அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்பாடு செய்யப்படும். ஜூன் மாதத்திற்குள் முடிந்த அளவிற்கு ஏற்பாடுகளை முடித்து, பேருந்து நிலையங்களை திறப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றோம் அல்லது ஓரிரு வாரங்கள் தள்ளிப் போனாலும் ஜூலை மாத இறுதிக்குள்ளாக நிச்சயமாக இந்த பேருந்து முனையத்தை திறப்பதற்குண்டான அனைத்து பணிகளையும் நிறைவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வுகளின் போது, சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்பட பலர் உடனிருந்தனர்.

The post மக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஜூனில் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Clambakkam Bus Terminal ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Klambakkam Bus Terminal ,Dinakaran ,
× RELATED இறை நம்பிக்கை கொண்டவர்கள்...