×

சட்டம் கடுமையாக அமலாகிறது தடையை மீறி இ-சிகரெட் விற்போருக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: இ-சிகரெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டத்தை கடுமையாக்க பொது அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால், இந்தியாவில் இ-சிகரெட் விற்பனைக்கும், இறக்குமதிக்கும் ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி இ-சிகரெட் கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்படுகிறது. 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கும் இ-சிகரெட்கள் விற்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், எலக்ட்ரானிக் சிகரெட் தடை சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும் வகையில் ஒன்றிய சுகாதார அமைச்சகம், இதுதொடர்பான பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ‘அனைத்து தயாரிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள், கூரியர் நிறுவனங்கள், சமூக ஊடக இணையதளங்கள், ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள், கடைக்காரர்கள்/சில்லறை விற்பனையாளர்கள் போன்றவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இ-சிகரெட்களை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, ஏற்றுமதி செய்யவோ அல்லது விற்கவோ கூடாது’ என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இ-சிகரெட்டுகளை விளம்பரப்படுத்தவோ, நேரடியாக அல்லது மறைமுகமாக பயன்பாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் பங்கேற்கவோ கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை மீறுவது தண்டனைக்குரியதாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post சட்டம் கடுமையாக அமலாகிறது தடையை மீறி இ-சிகரெட் விற்போருக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் பயன்படுத்தப்படும்...