×

மீஞ்சூர் அருகே திறக்கப்பட்டு செயல்படாத ஆரம்ப சுகாதார நிலையம்: பொதுமக்கள் அவதி

பொன்னேரி: மீஞ்சூர் அருகே வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியில் திறப்புவிழா நடத்தப்பட்டும் துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மீஞ்சூர் ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கும் செல்ல வேண்டிய அவல நிலை இருந்தது. இதனையடுத்து மக்களின் நீண்ட கால கோரிக்கையின் பேரில் 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாரம், ஒன்றிய கவுன்சிலர் பானுபிசாத் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் நீண்ட தூரம் பயணிக்காமல் தங்கள் கிராமத்திலேயே சிகிச்சை பெற முடியும் என அப்பகுதி மக்கள் பெரும் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட கட்டிடம் செயல்படவே இல்லை. மருத்துவரும் வரவில்லை. செவிலியர்களும் வரவில்லை. பூட்டியே கிடப்பதால் மாலை நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. அந்த புதிய கட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். குழந்தைகளும் கர்ப்பிணிகளும் சிகிச்சை பெற வழக்கம் போல் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளுக்கு சென்று வரவேண்டியுள்ளது. எனவே, உடனடியாக புதிதாக கட்டப்பட்டு திறப்பு நடந்த துணை சுகாதார நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மீஞ்சூர் அருகே திறக்கப்பட்டு செயல்படாத ஆரம்ப சுகாதார நிலையம்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Primary Health Center ,Meenjoor ,Ponneri ,Mettupalayam ,Vannipakkam Panchayat ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு