×

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி வார்டுகளில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என திமுக, அதிமுக, பாமக கவுன்சிலர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை, மேட்டு தெரு, தபால் தெரு, ரெட்டம்பேடு சாலை, சரண்யா நகர், காட்டுக்கொள்ளை, விவேகானந்த நகர், கங்கன் தொட்டி, கோரிமேடு, மேட்டு காலனி, வெட்டுகாலனி, திருவள்ளூர் நகர் உள்ளிட்ட 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் தேவைக்காக குடிநீர், சொத்து வரி, தொழில்வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். இதனால், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், 2 மாதங்களுக்கு ஒருமுறை கவுன்சிலர் கூட்டம் நடத்தப்பட்டு, மக்களின் குறை நிறைகளை தீர்க்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் பேருராட்சி தலைவர் சகிலா தலையைில் நேற்று நடைபெற்றது. இதில், செயல் அலுவலர் யமுனா, துணை தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பிறப்பு இறப்பு, வரவு, செலவு, வரி வசூல், நிலுவை, அனுமதி, ஒப்புதல் உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் சிலர், பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது, அடுக்கடுக்காக குறைகளை கூறினர். குறிப்பாக மின்விளக்கு வசதி இல்லை, சுகாதார சீர்கேடு, குப்பைகள், கழிவுநீர் தேக்கம், துப்புரவு பணிகளில் தொய்வு என செயல்படாத நிலையில் பேரூராட்சி நிர்வாகம் இருப்பதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அதிமுக கவுன்சிலர் ரவி கூறுகையில், 4வது வார்டில் துப்புரவு பணிகளுக்கான உபகரணங்கள் தட்டுப்பாடு, குப்பை சேகரிக்கும் வண்டிக்கு டயர் இல்லை, தூர்ந்து போன கால்வாய் இருப்பதாகவும், இதனால் துப்புரவு பணிகள் பாதித்து, 4வது வார்டு மக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், பிப்ரவரி மாதம் ரூ.45.14 லட்சம், மார்ச் மாதம் ரூ.60.05 லட்சம் என செலவு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்யாத நிலையில், எதற்காக இந்த செலவு செய்யப்பட்டது என்பது தெரிவிக்க வேண்டும். கவுன்சிலர்கள் கடுமையாக செயல்படுவதை கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்பு, 1வது வார்டு திமுக கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், சிப்காட் வளாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் கால்வாயில், தொழிற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. அவை நேராக 1வது வார்டுக்கு உட்பட்ட இடத்தில் தேங்கி, கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் கலக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திமுக அப்துல் கறீம் கூறுகையில், கும்மிடிப்பூண்டி நகர் பகுதியை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், 11வது வார்டு பாமக கவுன்சிலர் ஜோதி இளஞ்செல்வம் கூறுகையில், மேட்டுதெரு பகுதியில் பல மாதங்களாக தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எடுத்து கூறியும், செயல் அலுவலர் யமுனா நடவடிக்கை எடுக்கவில்லை என கடுமையாக பேசினார். பின்னர் 5வது வார்டு கவுன்சிலர் கருணாகரன் கூறுகையில், சாய்கிருபா நகர் சாய் தக்ஷிணாமூர்த்தி கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்வாய் மற்றும் தெருவிளக்கு நீர்த்தேக்க தொட்டி, தொடர் மின்னழுத்தம் உள்ளிட்ட பணிகள் இதுவரை நடைபெறவில்லை என்றார்.

The post கும்மிடிப்பூண்டி பேரூராட்சி வார்டுகளில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kummhipundi ,Gumbipundi ,Gummipundi ,Gummipondi ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...