×

கலாஷேத்ரா பாலியல் விவகாரம் பாலியல் தொந்தரவு இருந்ததாக 4 மாணவிகள் தகவல்: மகளிர் போலீசார் விசாரணையில் பகீர்

சென்னை: கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் 10 மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், அதில் 4 மாணவிகள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்ததாக போலீசாரின் விசாரணையில் ெதரிவித்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது உதவியாளர்களான நடன கலைஞர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் உதவி நடன கலைஞர்களான சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீ நாத் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் மாநில மகளிர் ஆணையம் வலிறுத்தியது. அதன் தொடர்ச்சியாக அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் 162 மாணவிகளுக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பி கடந்த 2 வாரங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை 10 மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதில் 4 மாணவிகள் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 6 பேர் எங்களுக்கு யாரும் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை என்றும், இந்த வழக்கிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 4 மாணவிகள் பேராசிரியர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதால், சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் நடத்திய விசாரணையின் போது அவர்கள் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொடர்பாக இன்னும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதை தொடர்ந்து மாணவிகள் குற்றம்சாட்டியுள்ள பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தி அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post கலாஷேத்ரா பாலியல் விவகாரம் பாலியல் தொந்தரவு இருந்ததாக 4 மாணவிகள் தகவல்: மகளிர் போலீசார் விசாரணையில் பகீர் appeared first on Dinakaran.

Tags : Khalashethra ,Bakir ,Chennai ,Kalashethra ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...