×

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து மலேசிய கோயில்களுக்கு வஸ்திர மரியாதை: இந்து சமய அறநிலையத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களிலிருந்து, மலேசியாவில் உள்ள சுப்பிரமணியர், விநாயகர் கோயில்களுக்கு வஸ்திர மாலை வழங்கப்பட்டது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், ‘பிற மாநிலங்கள், பிற நாடுகளிலுள்ள கோயில்களுடன் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோயில்களிலிருந்து வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில், ஏற்கனவே, சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலிருந்து ஆந்திர பிரதேசம், சைலம் மல்லிகார்சுன சுவாமி கோயிலுக்கும், காஞ்சிபுரம் மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள் எம்பார் சுவாமி கோயிலிலிருந்து கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, செல்வ நாராயண பெருமாள் கோயிலுக்கும், ஸ்ரீ ரங்கம், அரங்கநாத சுவாமி கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர், ஆண்டாள் (நாச்சியார்) கோயில் மற்றும் திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கும், ஸ்ரீ ரங்கம், அரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோயிலுக்கும், வஸ்திர மரியாதை மற்றும் மாலைகள் வழங்கப்பட்டு
வருகின்றன.

அதனைத் தொடர்ந்து நேற்று மலேசியா நாட்டில் உள்ள பத்துமலை, சுப்பிரமணியர் கோயில் , கொடுமலை, விநாயகர் கோயிலுக்கு தமிழ்நாட்டில் உள்ள மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், அழகர்கோவில், கள்ளழகர் கோயில், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் மற்றும் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் ஆகிய கோயிலிலிருந்து வஸ்திர மரியாதை, மாலை ஆகியவை வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து மலேசிய கோயில்களுக்கு வஸ்திர மரியாதை: இந்து சமய அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Subramaniar ,Vinayagar ,Malaysia ,Department of Hindu Religious Charities ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...