×

மதுரை பாஜ பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்: மாவட்ட தலைவர் மீது சரமாரி புகார்

மதுரை: மதுரை பாஜ மாவட்ட தலைவர் மீது சரமாரி புகார் கூறி பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி 86வது வார்டு பாஜ கவுன்சிலர் பூமா. 100 வார்டுகளில் பாஜ சார்பில் போட்டியிட்டு இவர் மட்டுமே வெற்றி பெற்றார். இவர், பாஜ மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘என்னை மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட துணை தலைவராக நியமித்திருப்பதை அறிவேன். ஆனால், மாவட்ட தலைவரான தங்கள் செயல்பாடுகளும், சுயநலப்போக்கும் கட்சியை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லாமல், அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்வதை அறிகிறேன்.

சுயநலத்தோடும் கட்சி விசுவாசமின்றியும் செயல்படும் தங்களுடன் இணைந்து பணியாற்றுவது கட்சிக்கு நான் செய்யும் இழிசெயலே. ஆகவே, மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விலக்க வேண்டும். தங்களுடன் இணைந்து இனி செயலாற்ற மனமில்லை. கட்சியின் அங்கீகாரத்தோடும், மாநில தலைவரின் ஆதரவோடும் 86வது வார்டு மக்களுக்கு சேவையாற்றி கட்சிக்கு முழு விசுவாத்துடன் செயல்படுவேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுன்சிலர் பூமாவிடம் கேட்டபோது, ‘‘கட்சிப்பதவியில் இருந்தே விலகுகிறேன். கட்சித் தலைமைக்கும் இதுகுறித்து என் தரப்பு விபரங்களை தெரிவித்திருக்கிறேன்’’ என்றார். மதுரை மாநகராட்சியில் பாஜவுக்கு இருந்த ஒரே கவுன்சிலர், மாவட்டத் தலைவர் மீது சரமாரி புகார் கூறி விட்டு கட்சியின் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரை பாஜ பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்: மாவட்ட தலைவர் மீது சரமாரி புகார் appeared first on Dinakaran.

Tags : Madurai Baja ,Madurai ,Chamari ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!