×

கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: ‘‘கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு பல்வேறு சமூக பொருளாதார குறியீடுகளில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும், ஒரு குறியீட்டில் மட்டும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

அது என்னவென்றால், கழிவுநீர் தொட்டிகளை சுத்திகரிக்கும்போது, உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை தான். கழிவுநீர் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவர்களின் விவரங்களை சமீபத்தில் ஆய்வு செய்தேன். இத்தகைய இறப்புகள் பெரும்பாலும், நகர பகுதிகளில் நடைபெறுகின்றன.
கடந்த பட்ஜெட் உரையில், இந்த பணியில் ஈடுபடுவோர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் பொருட்டு, ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்ற புதிய திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக, சென்னை பெருநகர பகுதியில் நவீன இயந்திரங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி, தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி, கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை அடுத்த நான்கு மாதங்களில் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மேலும், இந்த புதிய திட்டத்திற்காக காத்திராமல், இனிமேல் தமிழ்நாட்டில் எந்தவொரு இறப்பும், கழிவுநீர் சுத்திகரிப்பால் நேரக்கூடாது என்பதை மனதில் கொண்டு, நகராட்சி நிர்வாக துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பேரூராட்சி துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும். இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்கும்பொருட்டு, விரைவில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் வகுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படும் நமது மாநிலம், இந்த துறையில் மட்டும் பின்தங்கியுள்ளது குறித்து உண்மையிலேயே நான் மிகுந்த கவலை கொள்கிறேன். மேலும், நமது அதிகாரிகளும் இத்தகைய பணிகளில் போதிய கவனம் செலுத்த தவறிவிடுகிறார்கள்.

இனி வருங்காலங்களில், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறி, அதன் வாயிலாக, இறப்புகள் நேருமானால் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார்மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : CM G.K. Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED வானகரத்தில் பழைய இரும்பு மற்றும்...