×

மனம் என்ற சர்வாதிகாரி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 49

(பகவத்கீதை உரை)

இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மன:
மனஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்துஸ: (3:42)

இந்திரியங்களைக் கட்டுப்படுத்த உன் புத்தியைப் பயன்படுத்து. இதனால் உன் மனமும் அடங்கும். ஆனால் ஒரு கட்டத்தில் இவ்வாறு கட்டுப்படுத்துவதால் உன் புத்திக்கு அகங்காரம் வந்துவிடும். இந்த புத்தியை ஆன்மாவுக்கு அடிமைப்படுத்து. அதாவது இந்திரியங்கள், மனம், புத்தி எல்லாவற்றையுமே ஆன்ம சொரூபமான பரமாத்மாவிடம் ஒப்படைத்துவிடு. ஆன்மாவின் சிறப்பை கிருஷ்ணன் விளக்குகிறார். மனதுக்கு இரண்டே நிலைகள்தான். ஆசைகொள்வது, வருத்தம் கொள்வது. ஆசை மூலமாக மனம் இந்திரியங்களை ஆட்டிப் படைக்கிறது. அதனால் புத்தி, மனசுக்கு அடிமையாகிறது. அது முடங்கிப் போய்விட அனுமதிக்கக் கூடாது. புத்திக்கு நல்லதுக்கும், கெட்டதுக்குமான பாகுபாடு தெரியும்.

இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்ற செயல் நேர்மை தெரியும். ஆகவே, மனதைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, புத்திக்கு வேலை கொடுக்க வேண்டியது அவசியம். இதில் வேடிக்கை என்னவென்றால், மனதின் ஈடுபாடு இல்லாமலேயே நாம் சில செயல்களைப் புரிந்து கொண்டிருக்கிறோம். சாலையில் நடக்கிறோம், கைவீசி நடக்கிறோம். அவ்வாறு நடக்கும்போது கால்களையும், கைகளையும் மனம் இயக்குவதில்லை. நடப்பது என்பது அனிச்சைச் செயலாக நிகழ்கிறது. அதாவது, பழக்கத்தின் காரணமாக நடக்கிறது. ஆனால், அதே சமயம் மனம் இந்திரியங்களில் கவனம் செலுத்துகிறது.

உதாரணமாகப் பார்வையின் திசையைத் தீர்மானிக்கிறது. அதுவும் சாதகமான நன்மைக்கா என்பதும் சந்தேகமே. அதனால்தான் நடந்து செல்லும் நாம் வழியில் பள்ளத்தை அல்லது தடைமேட்டை ‘கவனிக்க’ இயலாமல் போகிறது; இயல்பாக நடந்து கொண்டிருக்கும் கால்கள் அதனால் தடுக்கித் தடுமாறுகின்றன.இந்த சமயத்தில் புத்தியின் துணையைநாம் நாடவேண்டியவர்களாக இருக்கிறோம்.

மனம் கண்களை தன் போக்குக்குப் பார்வையைச் செலுத்த வைத்தாலும், அவ்வப்போது சாலையைப் பார்க்கச் செய்து மேடு, பள்ளங்களைக் கணித்து கால்களை சீராக நடக்க வைக்கச் செய்யும், அந்த புத்தி. இப்படி புத்தியால் மனதை வென்று, புலன்களை அலைக்கழிக்காமல் நேர்வழியில் செலுத்த முடியும். ஆனால், ஒரு கட்டத்தில் புத்திக்குள் செருக்கு புகுந்துவிடும். ‘வலிக்கிறது, என்னால் முடியவில்லை’ என்று கால்கள் கெஞ்சினாலும், ‘நட’ என்று புத்தி அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிடும். புத்தியின் பேச்சைக் கேட்டு நடந்தால், இயலாமையால், சோர்வுற்று உடலே சரிந்துவிடும். இந்த சமயத்தில், புத்தியையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆமாம், புலன்கள், மனம், புத்தி எல்லாவற்றையுமே ஆன்மாவிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதாவது, ஆன்ம சொரூபமான பரம்பொருளிடம் அர்ப்பணித்துவிட வேண்டும். எண்ணங்கள், சொற்கள், இயக்கங்கள் எல்லாமே அந்தப் பரமாத்மாவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவை என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், புத்தி, மனம், புலன்கள் ஆகியவற்றின் செயல்களில் நம்மைத் தொடர்பு படுத்திக்கொள்ளாதவர்களாக இருக்க முடியும்.

எது சரியான வரிசை? புலன்கள்-மனம்-புத்தி-ஆன்மா அல்லது ஆன்மா-புத்தி-மனம்-புலன்கள்? இரண்டாவதுதான் சரி. நேரடி, பரிபூரண சரணாகதி – பரமாத்மாவிடம். மிச்செமல்லாம் தானாகப் பின்தொடரும். ‘நீ என்னை உணர்ந்தால், உன் இயக்கங்கள் எல்லாம் சரியாக இருக்கும். எண்ணத்தில் மயக்கம் ஏற்படாது, இப்படி மயக்கத்தை ஏற்படுத்தும் மனம் என்னிடம் ஒன்றிவிட்டால், புலன்கள் ஆக்கபூர்வமாகவே இயங்கும். இதனால் புத்திக்குஉத்தரவிடவோ, பிறகு ஆணவப்படவோ வாய்ப்பும் இருக்காது.’ என்கிறார் கிருஷ்ணன்.

ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மானமாத்மனா
ஜஹி சத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம் (3:43)

‘அர்ஜுனா, உன் மனதிற்கும் மேலானது உன் புத்தி. அந்த புத்திக்கும் மேலானது உன் ஆன்மா. மனம் இடம் கொடுப்பதால் மோகம் அதனுள் புகுந்துவிடுகிறது. அடுத்து அது புத்தியை ஆக்கிரமிக்கிறது, அதனை பேதலிக்கச் செய்துவிடுகிறது. அடுத்ததாக, மிகவும் உயரியதான உன் ஆன்மாவை அது அவமதிக்கிறது. ஆகவே ஆன்மாவையே பரிகசிக்கும் இந்த மோகத்தை ஆரம்ப கட்டத்திலேயே விரட்டிவிடு.’

நம்முடைய மனம் இருக்கிறதே, அது மிகவும் மோசமான சர்வாதிகாரி. சமயம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. கண் ஏமாறுமா, அது நல்லன விலக்கித் தீயவற்றைக் காணுமா, அப்படி தீயவற்றைக் காணும்போது சட்டென்று அதனுள் போய் அமர்ந்துகொண்டு அதனைத் தீயவழியிலேயே ஆட்டிப் படைக்கலாமா என்றெல்லாம் மனம் யோசிக்கிறது. கண் மட்டுமல்ல காது, மூக்கு, வாய், மேனி என்று எல்லா இந்திரியங்களின் மீதும் அது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது.

தத்தமது கடமைகளைச் செய்யும் இந்திரியங்களோ, மனத் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடிமைகளாகி விடுகின்றன. எதிரே நல்லது இருந்தும் அதை புறக்கணிக்கின்றன. பார்வைக் குளத்தில் படியும் பாசியான தீயனவற்றை மட்டுமே தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது கண். இதைப் போலவே பிற இந்திரியங்களும் அடிமைத் தொழில் புரிகின்றன.

பகவானால் படைக்கப்பட்ட இந்திரியங்களின் உயர் நோக்கத்தைச் சிதறடிக்கும் வண்ணமாக மனம் செயல்படுகிறது. ஏற்புடையதல்லாதவிஷயங்களில் நாட்டம் கொள்கிறது. அதாவது, உயர் நோக்கத்துக்காகவே படைக்கப்பட்ட இந்திரியங்களை அப்படி எதிராகவே இயங்க வைக்கவும் மனம் துணிவு கொள்கிறது. எதிலும் எதிர்ப்பு காட்டுவது என்பது ஒருவகை குரூர சந்தோஷம்.

பெரியவர்களை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே விடலைப் பையன்கள் சிகரெட் பிடிப்பதுபோல, இப்படி காட்டும் எதிர்ப்பால், தான் அவர்களிடமிருந்து முரண்பட்டவர்கள் என்பதை விளம்பரப்படுத்திக் கொள்ளும் குரூர சந்தோஷம். ‘இப்படிக் கெட்டுப் போகிறானே’ என்று அவர்கள் வெதும்பி வருந்துவதை ரசிக்கும் குரூர சந்தோஷம். அவர்களுடைய வருத்தம் தம் நலன் கருதித்தான் என்று புரிந்தாலும், அதை அலட்சியப்படுத்தும் குரூர சந்தோஷம்.

தாம் அவர்களுடைய உயரத்துக்கு வரவில்லையே என்ற ஏக்கத்தை மறைத்து, அவர்களை ஏளனம் செய்து திருப்திப்பட்டுக்கொள்ளும் குரூர சந்தோஷம். பக்க விளைவுகளோ, பின்விளைவுகளோ எப்படி இருந்தாலும் சரி, அப்போதைக்கு அவர்களை அவமரியாதை செய்து விட்டோம், மனவருத்தம் கொள்ள வைத்துவிட்டோம் என்ற குரூர சந்தோஷம்!

இதற்கெல்லாம் முக்கிய காரணம், அப்போதைய சந்தோஷம்தான். அது அற்ப சந்தோஷமாகவும் இருக்கலாம், அநியாய சந்தோஷமாகவும் இருக்கலாம். ஆனால், இந்த மனம் என்ற சக்தி, அதன் பலம் எல்லாம் இறைவன் அளித்தது என்ற உண்மையை உணர்வோமானால், அப்போது இத்தகைய சந்தோஷத்துக்கெல்லாம் மனம் விழையாது. இந்திரியங்கள் படைக்கப்பட்டதன் பேருண்மைபுரிய வருவதால், அவற்றை எதிர்மறைக கோணத்தில் செலுத்தவும் மனம் விரும்பாது.

இதனால், மகாகவி பாடியதுபோல, காக்கைச் சிறகின் கருமை நிறத்திலும் நந்தலாலாவின் கருமை நிறம்தான் மனசுக்குத் தோன்றும். மரங்களின் பசுமையிலெல்லாம் பரந்தாமனின் பச்சைநிறம்தான் தோன்றும். கேட்கும் இசையெல்லாம் அவன் கீதம் இசைப்பதாகவே தோன்றும். ஏன், தீக்குள் விரலை வைத்தாலும் அது சுடாது, எம்பெருமானைத் தீண்டுகிறஇன்பம்தான் தோன்றும்.

இப்படி மனம் ஒடுங்கிவிட்டால், அது அடுத்து புத்தியுடன் போரிட வேண்டிய அவசியம் நேரிடாது. அதாவது, இந்திரியங்களை மனதின் மூலம் வசப்படுத்திவிட்டால், பிறகு புத்திக்கு மனம் அடிபணியும். நல்லது, கெட்டதை ஆராய்ந்து, தகுதி பிரித்து செயல்படக்கூடிய புத்தி, மனதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். இந்த புத்தியையும் நாம் பரந்தாமனின் பாதங்களில் சமர்ப்பித்துவிட வேண்டும். பகவத் கிருபை புத்திக்குக் கிடைத்து விடுவதால், அது மனதையும், அதன் மூலமாக இந்திரியங்களையும் திறம்பட நிர்வகிக்கும். இத்தகைய நிர்வாகத்தின் பிரதான பலன் மோகம் அகன்றுவிடுவதுதான்!

பகவான் பாதங்களை அடைக்கலமாகக் கொண்ட புத்தி, அத்தகைய புத்தியால் நிதானமடையும் மனம், இத்தகைய மனதால் சலனப்படாத இந்திரியங்கள் என்று உயர்நிலைத் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.இந்திரியங்கள் பழக்கங்களைச் சார்ந்தே இயங்குபவை. பார்ப்பது, கேட்பது, நுகர்வது, பேசுவது, கைகால் அசைப்பது என்று எல்லாமே பழக்கம் சார்ந்தவைதான். இமைகள் திறந்திருந்தால் பார்ப்பதும், உதடுகள் திறந்திருந்தால் பேசுவதும், தன்னிச்சையாக வாசனைகளும், சப்தங்களும் மூக்காலும், காதாலும் ஈர்க்கப் படுவதும் எல்லாமே பழக்கம் சார்ந்தவைதான். இந்த ஒவ்வொரு செயலிலும் மனமும் கூடவே இழைந்து வருகிறது என்றாலும், தன்னிச்சையாக செயல்படுவது என்பது, பழக்கம் காரணமாக இந்திரியங்களின் இயல்பாகவே அமைந்து விட்டது.

உதாரணமாக, ஒரு மேடையில் ஒரு பேச்சாளர் பேசுகிறார். அவருக்கு வாய் என்ற இந்திரியம் செயல்படவேண்டும். தான் பேசுவதை, கூடியிருப்பவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அவருடைய கண்கள் கவனிக்க வேண்டும். ஆனால், கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் அவருடைய கைகள் இரண்டும் ஏன் மேலும், கீழுமாக இயங்குகின்றன? ஒரு கை மைக்கைப் பிடித்துக்கொள்கிறது, ஒரு கை, மைக் பொருத்தப்பட்ட மேடையைப் பற்றிக்கொள்கிறது அல்லது பேச்சின் தொனிக்கேற்ப மேலோ கீழோ அசைகிறது. ஏன்? இது மனம் உத்தரவிடுவதால் செய்யப்படுகிறதா? ஆனால் மனதின் நோக்கம் அன்று சொற்பொழிவு நிகழ்த்தப்படுவதில்தானே இருக்கமுடியும்? அப்படியானால் கைகளுக்கு உத்தரவிடுவது யார்?

இதுதான் பழக்கம் என்பது. பழக்கத்தால் வருவது. அதாவது சில சமயம், பழக்கம் காரணமாக, செய்கைகளுக்கும், மனதுக்கும் சம்பந்தமே இல்லாமல் போவதும் உண்டு! வேடிக்கைதான் இல்லையா? இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மனதின் ஈடுபாடு இல்லாமலேயே இந்திரியங்கள் இயங்குகின்றன என்பதுதான்.

இன்னொரு உதாரணமும் பார்க்கலாம். சிலர் ஒரே நேர்பார்வையாக நிலைகுத்தியபடிபார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எதிரே காட்சிகள் ஓடும். என்னவெல்லாமோ நிகழும். ஆனால், அவர்களால் அந்தக் காட்சிகளில் ஒன்ற முடியாது. காரணம், கண்களின் பார்வையில் மனம் இருக்கவில்லை. அது எங்கோ இருக்கிறது. ஆனால், பழக்கம் காரணமாக கண்கள்காட்சிகளைப் பார்க்கின்றன. காட்சிகள் மனதில் பதியாததற்குக் காரணம், இப்படி மனம்கண்களைவிட்டு விலகி இருப்பதுதான்.

இதேபோலதான் காது, மூக்கு, வாய் எல்லாம். அநிச்சையாக இந்திரியங்கள் செயல்படுகின்றன – தூங்கும்போது கொசு கடித்தால், கடிபட்ட இடத்தை கை தானாகப் பட்டென்று அடிப்பதுபோல!காது கேளாத கோளாறுக்கான ஆரம்ப, அடிப்படை காரணமே, ‘இவன் என்ன சொல்றது, நான் என்ன கேட்கறது’ என்ற மனோபாவம்தான்! நம்மிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் மெனக்கெட்டு சில தகவல்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்.

அவர்மீது நமக்கு நல்ல அபிப்ராயம் இல்லை அல்லது அவர் சொல்லவரும் விஷயங்கள் நமக்குத் தேவைப்படாது, அவர் நம் நேரத்தை வீணடிக்கிறார் என்ற அவரைப் பற்றிய குறைவான மதிப்பீடு அல்லது நமக்குத் தெரியாத அறிவுப்பூர்வமான ஒரு நல்ல தகவலைத் தெரிவிக்கிறாரே என்ற பொறாமை அல்லது அவர் சொல்லக்கூடிய புதுமை விஷயங் களைத் தெரிந்துகொள்ள விரும்பாமை என்று எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

எதுவானாலும், கேளாதது என்பது அலட்சியம் சார்ந்ததுதான். இதில், சொல்லப்படுவதை அநிச்சையாகக் காது கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது, ஆனால், மனம் அதை உள்வாங்கிக் கொள்ளாமல் அலட்சியம் என்ற ஆயுதத்தால் அடித்து வெளியே விரட்டுகிறது! இந்திரியங்களை இயல்பாகத்தான் கட்டுப் படுத்த வேண்டும். நிர்ப்பந்திக்கக்கூடாது. அவை உணர்வுகள் அற்றதாக இருக்க வேண்டியவை அல்ல. அத்தகையதானால் பகவான் அவற்றைப் படைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

அததற்கு என்ன கடமையோ அதனை ஆற்றவேண்டியவைதான் இந்திரியங்கள். எப்படிப்பட்ட கடமை என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது.‘கடமை’ என்று குறிப்பிட்டுவிட்டதால், அது யாருக்கும், எதற்கும், எப்போதும், எப்படியும் தீங்கு விளைவிக்கக்கூடாததாகத்தான் இருக்கவேண்டும் என்பதே அர்த்தமும் உண்டுஇல்லையா?

‘‘ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலையில் ம‌ர‌மாவேன்
க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன்
ப‌சும் புல்லானாலும் முருக‌ன் அருளால் பூ ஆவேன்
பொன்னானாலும் வ‌டிவேல் செய்யும் பொன்னாவேன்
ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கையில் பூவா‌வேன்
த‌மிழ் பேச்சானாலும் திருப்புக‌ழ் விள‌க்க‌ப் பேச்சாவேன்
ம‌ன‌ம் பித்தானாலும் முருக‌ன் அருளால் முத்தாவேன்
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
ப‌ழ‌ச்சுவையான‌லும் ப‌ஞ்சாமிர்த‌ச் சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன்
த‌னி உயிரானாலும் முருக‌ன் அருளால் ப‌யிராவேன்’’

அமரர் டி.எம்.சௌந்தரராஜனின் கணீர்க் குரலில் ஒலித்த இந்தப் பாடலை ஒருமுறை கேட்டவர்களால் என்றும் மறக்கவே முடியாது. எந்தத் தோற்றம், எந்த உணர்வானாலும் அதை இறைவனுக்கே அர்ப்பணிக்கும் பரிபூரண சரணாகதியை இப்பாடல் விவரிக்கிறது.

இதைத்தான் கிருஷ்ணன் சொல்கிறார், மனம், புத்தி இரண்டையும் பரம்பொருளிடம் சமர்ப்பித்துவிட்டால், இந்திரியங்கள் அதனதன் கடமைகளைச் செவ்வனே செய்யும். அதில் எந்த முரண்பாடோ, அத்துமீறலோ, இயல்புக்கு மாறாக அடங்கிப் போவதோ இருக்காது. ஏனென்றால் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் மனம் பகவானிடம் சரணடைந்துவிட்டதுதான்! அதனால் அது புத்தியையும் பேதலிக்கவிடாது. மனம் கற்பனைகளின் சமுத்திரமாகத் திகழ்கிறது. அந்த அலைகளுக்கு ஓய்வில்லை. அவை வண்ணமயமானவை, வசீகரம் மிகுந்தவை. அந்தக் கவர்ச்சிக்கு ஒளியில்லாவிட்டாலும், மினுமினுப்பு உண்டு! அதனால், ஒரு சாம்ராஜ்யத்தையே நிர்மாணிக்க முடியும், நிர்வகிக்க முடியும். ஆனால், உண்மை என்ன? அந்தக் கற்பனைக்கு வடிவம் கிடைத்து விடுமா?

ஆனால், பூசலார் நாயனாரின் கற்பனை இறையருளைப் பெற்றது. ஆமாம், தான் பிறந்த ஊரான திருநின்றவூரில், தான் தினமும் வணங்கும் ஈசன் ஓர் ஓலைக்குடிசையில் கொலுவிருப்பதைப் பார்த்து வெதும்பி மனசுக்குள்ளேயே அவருக்கான கோயிலை உருவாக்கினார் அவர். மானசீகமாக அதன் வரைபடத்தைத் தயாரித்தார், அனைவரிடமும் கட்டுமான செலவுக்கான பொருளை யாசகம் கேட்டார். தேர்ந்த சிற்பிகளையும், தச்சர்களையும் பணிபுரிய அமர்த்தினார், ராஜகோபுரம், துவஜஸ்தம்பம், பலிபீடம், மண்டபங்கள், பிராகாரங்கள், கருவறை, அதற்குப் பிரத்யேக விமானம், மதில் சுவர் என்று அனைத்தையும் தன் மனசுக்குள்ளேயே உருவாக்கினார்.

இந்தக் கற்பனை, மேலே படித்த வேகம்போல ஒருசில விநாடிகளில் முடிந்துவிடவில்லை. நிஜமாகவே ஒரு கோயிலைக் கட்டினால் எத்தனை நாட்களாகுமோ அத்தனை நாட்கள் அந்தக்கற்பனை விரிந்தது.இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போது அப்பகுதியை ஆண்டுவந்த பல்லவ மன்னன், அதே ஈசனுக்காகக் கண்கூடான ஒரு ஆலயத்தை உருவாக்கியதுதான். அதாவது, மன்னன் எத்தனை நாட்கள் உழைத்து உருவாக்கி முடித்தானோ அத்தனை நாட்கள் பூசலாரின் கற்பனையும் நீண்டது. இருவருமே ஒரேநாளில் தத்தமது கோயில்களுக்குக் கும்பாபிஷேக வைபவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டார்கள்.

முந்தின நாள் மன்னன் கனவில் இறைவன் வந்தார். ‘‘நாளை நடக்கவிருக்கும் உன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு என்னால் பிரசன்னமாக முடியாது. ஏனென்றால் என் தொண்டன் ஒருவன் இதே ஊரில் உருவாக்கியிருக்கும் கோயிலின் கும்பாபிஷேகமும் நாளைதான் நடைபெறப் போகிறது. நான் அங்கே செல்லவேண்டும்,’’ என்று தெரிவித்தார்.திடுக்கிட்டான் மன்னன். தனக்குச் சமமாக ஒரு சாமானியக் குடிமகனால் கோயில் எழுப்ப முடியுமா என்று ஆச்சரியம். மறுநாள் அந்த ஊருக்குத் தானே சென்று விசாரித்தபோது, பூசலார் மானசீகமாகக் கோயில் நிர்மாணித்திருப்பது தெரிந்தது. அப்படியே நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதம் பணிந்தான் மன்னன்.

இந்திரியங்கள், மனம், புத்தி, ஆன்மாஎல்லாமே இறைவனுக்கே சமர்ப்பணமாகும்போது கோயில் நிர்மாணிப்பதும், அதன் கும்பாபிஷேகத்துக்கு இறைவனே வருவதும் இயலாததா என்ன?
(இத்துடன் கர்மயோகம் அத்தியாயம் நிறைவு பெறுகிறது. அடுத்து நான்காவது அத்தியாயமான ஞானகர்ம ஸந்யாச யோகம் தொடங்குகிறது)

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post மனம் என்ற சர்வாதிகாரி appeared first on Dinakaran.

Tags : Srikkrishna ,
× RELATED பரந்தாமன் சொரூபத்துடன் ஐக்கியமாவோம்!