×

‘மக்களை தடுத்து நிறுத்த வேண்டாம்’ எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்: போலீசாருக்கு புதுச்சேரி முதல்வர் உத்தரவு

புதுச்சேரி: சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் முதல்வர்கள், அமைச்சர் பதவி வகிப்பவர்கள் பந்தா காட்டுவதை மக்கள் விரும்புவதில்லை. இதனால் முதல்வர், அமைச்சர்கள் சைரன் ஒலி எழுப்பிக்கொண்டு, முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனத்தை வைத்துக்கொண்டு செல்வதை எப்போதும் விரும்புவதில்லை. அதிலும் முதல்வர் ரங்கசாமி, பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்வதை ஒருபோதும் விரும்ப மாட்டார். ஒரே ஒரு பாதுகாப்பு வாகனம் மட்டும், நன்கு இடைவெளி விட்டு முதல்வரின் காரின் பின்புறமாக வருவதற்கு அனுமதி உண்டு.

மற்றபடி சைரன் ஒலி மற்றும் கைகளை காட்டி பொதுமக்களை ஒதுங்கிப்போ… என பாதுகாப்பு அதிகாரிகள் சாலையில் செல்வோரை விரட்டுவதை ரங்கசாமி ஏற்க மாட்டார். சில நேரங்களில் வழக்கமாக செல்லும் காரை விடுத்து, வேறு ஒரு காரில் மிக எளிமையாக புதுச்சேரியை சுற்றி வந்து பார்த்தப்படியும் ரங்கசாமி செல்வார். முதல்வரே அப்படியிருக்கும்போது, புதிதாக வரும் அமைச்சர்களும், நமக்கு ஏன்? பந்தா என ஒரே ஒரு காரில் மட்டும் வந்து செல்கிறார்கள். இதற்கிடையே புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு முதல்வர் ரங்கசாமி காரில், பாதுகாப்பு வாகனத்துடன் வருவார்.

அண்மைக் காலமாக முதல்வர் வீட்டிலிருந்து கிளம்பியது முதல், சட்டப்பேரவை வரும் வரை, பல சாலைகளில் மக்களை போலீசார் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இத்தகவல் முதல்வர் ரங்கசாமிக்கு கவனத்துக்கு சென்றது. முதல்வர் வரும் நேரத்தில் டிராபிக் சிக்னல் நிறுத்தப்பட்டு, அவர் வாகனம் சென்றவுடன்தான் இயக்கப்படுவதால், நெடுநேரம் மக்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனையறிந்த அவர், போக்குவரத்து போலீஸ் எஸ்பி மாறனை அழைத்து, ‘வெயில் நேரத்தில் ஏன்? மக்களை எனக்காக நிறுத்துகிறீர்கள், அவர்கள் எப்போதும் போல செல்லட்டும், நான் எப்போதும் போல சிக்னலில் நின்று செல்கிறேன்’ என உத்தரவிட்டுள்ளார்.

The post ‘மக்களை தடுத்து நிறுத்த வேண்டாம்’ எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்: போலீசாருக்கு புதுச்சேரி முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Chennanjhya Union Territories ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...