×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் ஜூலை மாத இறுதிக்குள் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

பல்லாவரம்: கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும் ஜூலை மாத இறுதிக்குள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். பல்லாவரம் அருகே பம்மல், ஈஸ்வரி நகர் பகுதியில் ₹2 கோடி மதிப்பில் புதிதாக அமைய இருக்கும் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் பணிகளை இன்று காலை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் ஆம்னி பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு வசதியாக, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, முடிச்சூரில் 5 ஏக்கர் நிலபரப்பில் ₹29 கோடி மதிப்பில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இப்பணிகள் அனைத்தும் இன்னும் 6 மாதங்களில் நிறைவு பெற்று, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதோடு 28 இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு, அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். அதன்படி, மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் பூங்காக்கள் அமைத்தல், பள்ளி சீரமைப்பு, பஸ் நிலையம் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ₹2 கோடி மதிப்பில் சீக்கனா ஏரியை மேம்படுத்துதல், முடிச்சூர் ரங்கா குளத்தை ₹1.5 கோடி மதிப்பில் மேம்படுத்தல் மற்றும் ஆலந்தூர் தொகுதியில் ₹10 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் கட்டுதல் போன்ற பணிகளை இன்று ஆய்வு செய்தோம். இவைகள் அனைத்தும் 3 மாதங்களில் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் துவக்குகிறோம். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் அடிப்படை தேவைகள் கணக்கிடப்படாமல் உள்ளதாலும், தற்போது, போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போதுமான வேலைகளை செய்து வருகிறோம்.

அதனால் வரும் ஜூன் மாதம் பஸ் நிலைய திறப்பு தள்ளி போனாலும், ஜூலை மாதம் கண்டிப்பாக திறக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கும் முடிச்சூரில் அமையவிருக்கும் புதிய தனியார் ஆம்னி பஸ் நிலையத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 2 பணிகளும் வேறு வேறு. அதனால், வரும் ஜூலை மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் துணைமேயர் காமராஜ், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் ஜூலை மாத இறுதிக்குள் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Klambakkam ,Minister ,Shekharbabu ,Pallavaram ,Klambakkam bus station ,Pallavaram… ,
× RELATED கிளாம்பாக்கம் பஸ் நிலையம் விரைவில்...