×

பச்சிளங் குழந்தைகளுக்கான உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உளவியல் காரணிகள்

தாய்க்கும், குழந்தைக்குமிடையே ஆரோக்கியமான, சந்தோஷமான, உணர்ச்சிகரமான உறவு ஏற்பட தாய்ப்பால் ஊட்டுவது முக்கியமாகும். இதனால் தாய் திருப்திகரமான உணர்வை பெறுகிறார். குழந்தைப் பாதுகாப்பு உணர்ச்சியைப் பெறுகிறது.

இயற்கைக் கருத்தடைச் சாதனம்

தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், தாய்க்கு கருவணு வெளியிடல் நிகழ்ச்சித் தடைப்பட்டு தீட்டு வராமல் போய்விடுகிறது. இதனால் அடுத்த கர்ப்பம் ஏற்படுவது தடைப்படுகிறது. மேலும் கர்ப்பப்பையும் பழைய அளவுக்குச் சிறியதாகிறது. இதனால் தாய்ப்பால் இயற்கைக் கருத்தடைச் சாதனமாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாது தாய்ப்பால் ஊட்டுவது மார்பகப் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.

பிற நன்மைகள்

இளங்குழவி, பாலை உறிஞ்ச கடினமாக முயற்சிப்பதால் அதனுடைய தாடைகள் நன்றாக முழு வளர்ச்சி அடைகின்றன.தாய்ப்பாலில் எந்தவிதமான நுண்ணுயிரிகளும் இல்லாமல் மிகவும் சுத்தமானதாக இருப்பதால் தொற்றுநோய்கங கிருமிகளின் கலப்பின்றி உணவுக்குழாய் மண்டலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கின்றது.தாய்ப்பால் எப்போதுமே புதியதாகவும், சரியான குடிக்கும் வெப்பத்திலும் இருக்கும்.எந்த வேளையிலும் கொடுப்பதற்கு மிகவும் எளிது.

தவறான அளவுகளில் பாலைப் புகட்டுதல்

மற்றும் அதிகமாகப் புகட்டுதல் போன்ற ஆபத்துகள் கிடையாது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் பாட்டில் பால் குடித்த குழந்தைகளை விட சிறப்பான பகுத்தறியும் திறனும் (cognition) நுண்ணறிவுத் திறனும் (1.0) பின்னாளில் காணப்படும்.தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கவும், இளங்குழவிகளுக்கு பாதுகாப்பான, போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும் இந்திய அரசு, இந்திய தேசிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதையடுத்து இளங்குழவி மாற்றுப் பால்பொருட்கள் சட்டம் (Infant Milk substitute act) – (IMS) பாதுகாக்க, மேம்படுத்த, ஆதரவளிக்க உருவாக்கப்பட்டது.இளங்குழவிகளுக்கான மாற்று உணவுப் பொருட்களை ஊக்குவிக்கக் கூடாது.

உடல் நலப்பாதுகாப்பு மையங்களில் செயற்கை உணவுப் பொருட்களை மக்கள் கண்ணில் படும்படி கவர்ச்சிகரமாக அடுக்கி வைக்கக் கூடாது.செயற்கைப் பால் உணவுகள் தயாரிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த விற்பனையாளர்கள், தாய்மார்களை அணுகி அப்பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

செயற்கை பால் உணவு பொருட்கள்

பற்றிய எத்தகைய விளம்பர கையேடுகளோ, சிறு புத்தகங்களோ அனுமதிக்கப்பட மாட்டாது.உலக கூட்டமைப்பு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க, ஆகஸ்டு 1-7 வரை உலக தாய்ப்பாலூட்டும் வாரம் என அறிவித்துள்ளது.

செயற்கை உணவு கொடுத்தல் (Artificial feeding)

வேறெந்த உணவும் ஈடு செய்ய முடியாத சிறந்த உணவு தாய்ப்பாலே ஆனாலும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் செயற்கை உணவு கொடுப்பது அவசியமாகிறது. கீழ்க்கண்ட காரணங்களினால் செயற்கை உணவளித்தலுக்கு தாய் காரணமாகிறார்.குறுகிய கால நோய்களாகிய காய்ச்சல், பால்காம்பு வெடித்துப் போதல் அல்லது மிகவும் கொடுமையான நோய்களாகிய காசநோய் மற்றும் இருதய நோய்.தாய்க்கு ஸ்டீராய்டுகள், எதிர் உறைதல் பொருட்கள் (anti coagulants) மற்றும் கதிரியக்க மருந்துகள் கொடுக்கப்படுதல்.

குறைந்த பால் சுரப்பு.

தாயின் மரணம்.

கீழ்க்கண்ட காரணங்களால் செயற்கை உணவளித்தலுக்கு இளங்குழவி காரணமாகிறது.

மிகவும் மோசமான குறை வளர்ச்சி.

குறுகிய காலத் தொற்று நோய்கள்.

பிறவியிலேயே ஏற்படும் குறைபாடுகளாகிய “பிளந்த உதடு” (cleft palate) உணவுக்குழாய் மண்டலத்தில் அடைப்பு. (gastrointestinal tract obstructions)தாய்ப்பால் இல்லாதபோது, விலங்குகளின் பாலோ அல்லது டோண்டு பாலோ, மாற்று உணவாக கொடுக்கப்படலாம். அந்த பாலை நீர் சேர்க்காமல் அப்படியே கொடுக்கலாம். குழந்தையால் ஜீரணிக்க முடியாவிட்டால், பாலும் கொதிக்க வைக்கப்பட்ட நீரும் 3:1 என்ற விகிதத்தில் கலந்து கொடுக்கலாம். விலங்குகளின் பால் கொடுக்கும்போது இரும்புச்சத்தும், வைட்டமின் C சத்தும், ஈடுகட்டக் கொடுக்க வேண்டியது முக்கியம்.

விலங்குப் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட செயற்கை உணவுகள் தாய்ப்பாலை ஒத்து இருக்கும்படி அதன் ஊட்டச்சத்துக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரும்புச்சத்து செறிவூட்டப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு செயற்கை உணவு கொடுக்கும்போதும், அப்பொருட்களைக் கையாளும் போதும், தயாரிக்கும்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதை தயாரிக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள், பால் பாட்டில் மற்றும் நிப்பிள்களை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தாய்ப்பாலுடன் துணை உணவு கொடுக்க ஆரம்பித்தல்

குழந்தையின் உணவூட்டும் திட்டத்தில், தாய்பாலைத் தவிர, சிறிது சிறிதாக வேறு உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்கும் செயலே இணை உணவு கொடுத்தல் (Weaning) எனப்படும். தாய்பாலுடன் கொடுக்கப்படும் பிற உணவுகள் துணை உணவுகள் எனப்படும். குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க போதாது.

இணை உணவு கொடுத்தலானது, குழந்தைக்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு குடும்பத்தின் உணவு பழக்கவழக்கத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக தயார் செய்யவும் உதவும். இணை உணவு தரும் ஊட்டச்சத்தின் அடர்த்தி 0.25 கி.க முதல் 0.4கி.க/கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும். எனவே கலோரி அடர்த்தி அதிகம் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இணை உணவு அளிக்கும் கலோரிகளில், குறைந்தது 10 சதவிகிதம் புரதத்திலிருந்து கிடைக்க வேண்டும்.

துணை உணவுகளின் வகைகள்

1. பால் : ஆரம்பத்தில் பாலும், நீரும் 3 – 1 விகிதத்தில் கலந்து கொடுக்கலாம். சில வாரங்களில் தண்ணீரின் அளவை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டே வந்து, பாலை நீருடன் கலக்காமல் குடிக்க கொடுக்கலாம்.

2. பழச்சாறுகள் : தக்காளி, திராட்சை, ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடியிலிருந்து புதிதாக பிழியப்பட்ட சாறுகள் கொடுக்கலாம். 4-6 மாதங்களில் இச்சாற்றை கொடுக்க ஆரம்பிக்கும்போது ஒரு தேக்கரண்டியளவு நீருடன் கலந்து கொடுக்கலாம். சிறிது சிறிதாக அளவை அதிகரித்து அதிக நீர் சேர்க்காமல் (85 மிலி ஆரஞ்சு சாறு) கொடுக்கலாம்.

3. சூப்புகள் : கீரை சூப் செய்து கொடுக்கலாம். கீரைகளை நன்கு கழுவி, சிறிது உப்பும், வெங்காயமும் சேர்த்து, குறைந்த அளவு நீரில் வேகவைத்து, வடிகட்டிக் கொடுக்கலாம், சிறிது நாட்கள் கழித்து வடிகட்டாமல் கொடுக்கலாம்.

5 – 6 மாதங்களில் திட திரவ துணை உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாம். முதன் முதலில் கொடுக்கப்படும் திட திரவ உணவாக, மாவுப் பொருள் நிறைந்த உருளைக்கிழங்கு மற்றும் தானிய வகைகள் ஆகியவற்றை நன்கு வேகவைத்து, மசித்து கொடுக்கலாம். தானியப்பொருட்கள் உபயோகிக்கும்போது, வேக வைத்து, மசித்து அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்துக் கொடுக்கலாம். கலோரி அடர்த்தி நிறைந்த உணவு தயாரிக்க முளைகட்டிய கோதுமை அல்லது கேழ்வரகு உபயோகிக்கலாம்.

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கேரட், கீரைகள் ஆகியவற்றை கொஞ்சம், கொஞ்சமாக ஆரம்பிக்கலாம். இவை வைட்டமின்கள் தருவதுடன், உணவுக்கு நிறத்தையும் கொடுக்கவல்லது. வாழைப்பழம் தவிர பிற பழங்களை வேகவைத்தும், மசித்தும் கொடுக்கலாம். ஒரு வருடம் ஆன குழந்தைகளுக்கு பழங்களை நீரில் வேகவைத்துக் (stewed) கொடுக்கலாம்.

முட்டை மஞ்சள் 6-7 மாதங்களில் கொடுக்கலாம். அரைத் தேக்கரண்டி முட்டை மஞ்சள் கொடுக்க ஆரம்பிக்கலாம். குழந்தை அதை ஏற்றுக்கொண்டால், பின்னர் சிறிது சிறிதாக அதிகப்படுத்தலாம். முட்டை மஞ்சளை, மிருதுவான கஸ்டர்டுகளிலும் கொடுக்கலாம். முட்டை வெள்ளை சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்குவதால் 10 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம். அதன் பிறகு முழு முட்டையை மிருதுவாக வேக வைத்தோ அல்லது போச்சிங் (Poached) செய்தோ கொடுக்கலாம்.

வேகவைத்து மசித்த மாமிசம், வேக வைத்த மீன் இவற்றுடன் சிறிது உப்பும், வாசனையும் சேர்த்துக் கொடுக்கலாம். பருப்பு வகைகளைத் தானியங்களுடன் சேர்த்து நன்கு வேக வைத்த கிச்சடி அல்லது பொங்கல் அல்லது கஞ்சியாக கொடுக்கலாம். பருப்பு வகைகள் மற்றும் மாமிசம் தயாரிப்புகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுப்பதன் மூலம், வாரத்தில் 3-4 முறை குழந்தைக்கு இந்த உணவுகள் கிடைக்கும்.

திட துணை உணவுகள்

குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது திட உணவு ஆரம்பிக்கலாம். சமைக்கப்பட்ட தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் கொடுக்கலாம். திட திரவ உணவுகள், குழந்தைக்கு பழக்கமான பிறகு இட்லி, சப்பாத்தி, சாதம் மற்றும் பருப்பு போன்ற திடப்பொருட்களைக் கொடுக்கலாம். மசித்த மாமிசத்திற்குப் பதிலாக கொத்துக்கறி கொடுக்கலாம். சிறிதாக நறுக்கி வேகவைத்த காய்கறிகள், கீரைகள் மிருதுவாக வேக வைக்கப்பட்ட அல்லது பச்சை கேரட், தோலும், விதைகளும் நீக்கப்பட்ட பழத்துண்டுகள் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

திட உணவு சாப்பிடக் கொடுக்கும்போது, குழந்தைக்கு குடிக்க நிறைய நீர் கொடுக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை, சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு 2 லிருந்து 3 முறை கொடுக்க வேண்டும். வெய்யில் நாட்களில் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும்.

தொகுப்பு: சரஸ்

The post பச்சிளங் குழந்தைகளுக்கான உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும்...