×

திருப்பத்தூர் மாவட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து தரும் பொதுமக்களுக்கு பரிசு-கலெக்டர் தகவல்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து தரும் பொது மக்களுக்கு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் பாஸ்கர
பாண்டியன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஏ.கே. மோட்டூர் கிராமத்தில், நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சியில் ‘மீண்டும் மஞ்சப்பை’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, பொது மக்களுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கி மரக்கன்றை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாவது: மாவட்டத்தில் நியூட்ரி கார்டன் அமைப்பது தொடர்பாக ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். அடுத்த தலைமுறை நமது பிள்ளைகள் வாழப் போகிறார்கள். அதனால் அனைவரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறிகின்ற பிளாஸ்டிக் (நெகிழி) மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட முடியாது. அதனால் நெகிழிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் குப்பைகளை மூட்டை கட்டி போடுவதை தவிருங்கள். அதேபோல், உணவகங்கள், டீக்கடைகளில் நெகிழி பொருட்களின் மூலம் உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதன் மூலம் அதன் நிறம் மாறி ரசாயனம் நமது உடலுக்குள் செல்கிறது. இதன் மூலம் நமக்கு கேன்சர் வருவதற்கு கூட சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. அதற்கு மாற்றாக கண்ணாடி பாட்டில், வாழை இலை போன்றவைகளை உணவு அருந்துவதற்கு பயன்படுத்த வேண்டும்.

மேலும், நெகிழிகளை எரிப்பதன் மூலம் டைஆக்சின் எனும் வாழ்வு வெளியேறுகிறது. அதை நாம் சுவாசிக்கின்ற பொழுது அந்த டைஆக்சின் வாயுவானது நமது உடம்பிலிருந்து வெளியேற 11 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. மேலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும். நாம் தூக்கி எறிகின்ற நெகிழி பொருட்கள் அனைத்தும் கடல் ஏரி, ஆறு, கடலில் சென்று கலந்து மைக்ரோ பிளாஸ்டிக் ஆக மீண்டும் நமக்கு உப்பாக நமது உடம்பில் சேர்கிறது.

நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை அல்லது துணி பையை பயன்படுத்துங்கள். கடைகளில் பொருட்கள் வாங்கும் போது நெகிழி பைகள் கொடுத்தாலும் வாங்காதீர்கள். அடுத்த 15 நாட்களில் முக்கியமான இடங்களில் நெகிழி குப்பைகளை அகற்றி மரம் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரியாங்குப்பம் என்ற இடத்தில் ஆலமரம் சுற்றி குப்பைகள் இருந்தது. அனைத்து குப்பைகளையும் அகற்றி தற்பொழுது சிறப்பாக காட்சியளிக்கிறது. மேலும் அம்பலூரிலும் குப்பைகளை அகற்றி அமர்வதற்கு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அனைவரும் உங்கள் கிராமங்களில் மரங்களை நட வேண்டும். மரங்களை நடுவதன் மூலம் வெப்பநிலை குறையும், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இளைஞர்கள் அனைவரும் குழுவாக செயல்பட்டு மரங்களை அதகளவில் நடவு வேண்டும். மேலும் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். மேலும் பொது மக்கள் அனைவரும் மீண்டும் மஞ்சப்பைகள் அல்லது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். யாரெல்லாம் குப்பைகளை சரியாக தரம் பிரித்து கொடுக்கிறார்களோ முதல் மூன்று நபர்களுக்கு பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் பரிசளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், தினகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து தரும் பொதுமக்களுக்கு பரிசு-கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Baskara ,Dinakaran ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...