×

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களை காக்க மருந்து தெளிப்பு பணி-செடிகள் வளர்ச்சி மீட்டெடுக்க விவசாயிகள் மும்முரம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களை காப்பாற்றுவதற்கு தற்போது விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறியுள்ளனர்.

அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பருத்தி பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக கடந்தாண்டில் இந்த பருத்தி பயிர் இருமடங்கை விட கூடுதலான அளவில் அதாவது 40 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்த நிலையில் பின்னர் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டன. அதன்படி கடந்தாண்டு அதற்கு முன்னதாக இல்லாத வகையில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வரையில் விலை கிடைத்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்தாண்டில் கிடைத்த நல்ல விலையினை கருத்தில் கொண்டு நடப்பாண்டிலும் இந்த பருத்தி பயிர் சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டுள்ள நிலையில் நடப்பாண்டிலும் 41 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் திருத்துறைபூண்டி மற்றும் வலங்கைமான் உள்ளிட பல்வேறு பகுதிகளில் எள் சாகுபடியானது 12 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் அவ்வவ்போது பெய்து வந்த மிதமான மழை காரணமாக இந்த பருத்தி மற்றும் எள் பயிர்களை மழை நீர் சூழந்த நிலையில் கடந்த 6ம் தேதி இரவு மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக இந்த பருத்தி மற்றும் எள் பயிர்களில் பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகள் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர்.

அதன்படி, நன்னிலம், வலங்கைமான், கொரடாச்சேரி, நீடாமங்கலம் மற்றும் திருவாரூர் ஒன்றியங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரும், திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் ஒன்றியங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எள் பயிரும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் எள் பயரினை கலெக்டர் சாரு உத்தரவின் பேரில் தற்போது மாவட்டம் முழுவதும் வேளாண் அலுவலர்கள் பருத்தி மற்றும் எள் பயிரினை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி வருவதுடன், பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்றுவது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

அதன்படி, பருத்தி செடிகளில் ஏற்பட்டுள்ள வாடல் நோயினை கட்டுப்படுத்திட ஆக்ஸிகுலோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்கள் நனையுமாறு ஊற்ற வேண்டும். மேலும் பூக்கள் ஊதிராமல் இருப்பதற்கு பிளானோபிக்ஸ் 175 மில்லி மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பருத்தி செடிகளில் தெளிக்க வேண்டும். மேலும் செடிகள் வளர்ச்சியினை மீட்டெடுக்க 19 : 19 : 19 என்ற கலப்பு உரத்தினை ஒரு சதவீதம் இலை வழியாக தெளிக்க வேண்டும், மேலும் காய் அழுகலை கட்டுப்படுத்திட கார்பெண்ட்சிம் 500 கிராம் மருந்தினை ஒரு ஹெக்டேர் பருத்தி பயிரில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளதையடுத்து தற்போது விவசாயிகள் இதற்கான பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.

The post மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களை காக்க மருந்து தெளிப்பு பணி-செடிகள் வளர்ச்சி மீட்டெடுக்க விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Dinakaran ,
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...