×

மணக்குடியில் ‘ஜி 20 மெகா கிளீனிங்’ ‘குப்பையில்லா குமரி’ மக்கள் இயக்கமாய் மாறுவோம்-அமைச்சர் மனோதங்கராஜ் வேண்டுகோள்

நாகர்கோவில் : குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாறுவோம் என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பொதுமக்கள், மாணவ மாணவியருக்கு வேண்டுகோள் வைத்தார்.ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவகால அமைச்சகம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து ‘ஜி 20 மெகா கிளீனிங்’ நிகழ்வின் ஒரு பகுதியாக கடலோர பகுதிகளை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி மணக்குடி கடற்கரை பகுதியில் நேற்று காலை நடந்தது.

விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத், வன அலுவலர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கடலோர பகுதிகளை தூய்மைப்படுத்துதலை தொடங்கி வைத்து தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:

மிகவும் அற்புதமான கடற்கரைகளை, மலைகளை, சமவெளிகளை, நீர்நிலைகளை உள்ளடக்கியது குமரி மாவட்டம். மாவட்டத்தின் இன்றைய அழகு என்பது அன்றைக்கு இருந்ததில் 10ல் ஒரு பங்காக உள்ளது. வெகு விரைவாக அழிந்து கொண்டு இருக்கின்ற மாவட்டமாக உள்ளது. பேரழிவுகள் இயற்கையாலும், மனிதனாலும் ஏற்படுகிறது.இந்த பேரழிவை மனிதனால் தடுக்க முடியும்.

கடற்கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் எல்லா இடங்களிலும் காணப்படுக்கிறது. பிளாஸ்டிக்கை அன்றாடம் பயன்படுத்துவதில் இருந்து 100 சதவீதம் நீக்க முடியும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் சென்று கடற்கரை சூழல் பற்றி பார்த்துள்ளேன். கடலோர பகுதிகள் கடைசி பகுதியாக உள்ளது.

நன்னீர் ஆதாரங்கள் நீர் கடைசியில் கடலில் வந்து சேருகிறது. நன்னீர் ஆதாரங்களில் சாக்கடை கழிவுகள் விடுவதால் அவை நன்னீர் ஆதாரங்களை மாசுபடுத்தி கடலுக்கு வருகிறது. மணக்குடியில் உள்ள கழிமுக பகுதிகள் சிறப்பான ஒன்று. பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் இருக்கும் வரை இது இருக்கும். அடுத்த தலைமுறை இந்த அழகை பார்க்க வேண்டுமானால் பிளாஸ்டிக்கு எதிராக பெரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாணவ, மாணவியர் ஏற்படுத்த வேண்டும்.

மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் பகுதிகள் குமரி மாவட்டத்தில் இன்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பிளாஸ்டிக் இல்லா நிலையை ஏற்படுத்த ஒரு பிரசாரத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். குப்பை இல்லா குமரி என்ற நிலையை மக்களிடம் இருந்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும். வந்தோம், படம் எடுத்தோம், பேஸ்புக்கில் போட்டோம் என்று இல்லாமல் எல்லோரும் மனதளவில் உறுதி ஏற்க வேண்டும். குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாய் மாறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் பி.என்.தர், எஸ்.பி ஹரி கிரன் பிரசாத், மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆகியோர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கடல் மாசுபடுவது தவிர்ப்பது குறித்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டதோடு, கடற்கரையினை தூய்மைப்படுத்தும் பணியில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து, கடல்மாசுபடுவது தடுப்பது குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் அமைச்சர் தொடக்கி வைத்ததோடு, கடலில் கிடைக்கும் அரியசங்கு வகைகளையும் பார்வையிட்டார்.

மாவட்ட சுற்றுச்சூழல் நல அலுவலர் சுயம்புதங்கம், மணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சிறில் நாயகம், மாவட்ட ஆட்சியரின் மனைவி விஜெதா அன்னிமல்லா, திமுக நிர்வாகிகள் பாபு, லிவிங்ஸ்டன், பார்த்தசாரதி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பசுமை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை

விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:குமரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை போன்றவற்றுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் ஆமை குஞ்சுகள் விடுதல், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க நம்மால் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பசுமை மாவட்டமாக குமரியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். நீர்வழி வாய்க்கால்கள், நீர்நிலைகளை பிளாஸ்டிக் அடைந்து கடைசியில் அது கடலை சென்றடைகிறது. எனவே இதனை தடுக்க அனைவரும் இணைந்து இதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மணக்குடியில் ‘ஜி 20 மெகா கிளீனிங்’ ‘குப்பையில்லா குமரி’ மக்கள் இயக்கமாய் மாறுவோம்-அமைச்சர் மனோதங்கராஜ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : G20 Mega Cleaning ,Guppaiilla Kumari ,Manakudy ,Minister ,Manodhankaraj ,Nagercoil ,Tamil Nadu ,Dairy Minister ,Manothankaraj ,
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது