×

கோடை விடுமுறை, ஞாயிற்றுக்கிழமையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

*நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம்

திருச்செந்தூர் : கோடை விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரதவீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி, தைப்பூச திருவிழாக்களில் விரதமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்துவதற்காக இந்து சமய அறநிலைய துறையும், ஹெச்சிஎல் நிறுவனமும் இணைந்து ரூ.300 கோடியில் மெகா மேமம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி கடற்கரை, நாழிகிணறு, கோயில் வளாகம், ரதவீதிகள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே தென்பட்டனர். ரதவீதிகளில் பக்தர்கள் மற்றும் அவர்கள் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று கண்காணித்து போக்குவரத்தை சரி செய்தனர். கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

The post கோடை விடுமுறை, ஞாயிற்றுக்கிழமையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Alaimothy ,Thiruchendur temple ,Thiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...