×

பெங்களூருவில் கனமழை ஆர்சிபி – குஜராத் போட்டி தாமதமாக தொடங்கியது

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளிடையேயான லீக் ஆட்டம், கனமழை காரணமாக தாமதமாகத் தொடங்கி நடைபெற்றது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.30க்கு இப்போட்டி தொடங்குவதாக இருந்த நிலையில், பலத்த மழை கொட்டியதால் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆர்சிபி தொடக்க வீரர்களாக விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் ஏற்கனவே குவாலிபயர்-1ல் விளையாடுவதை உறுதி செய்துவிட்ட நிலையில், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே 4வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றில் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஆர்சிபி விளையாடியது.

அதிரடியாக விளையாடிய கோஹ்லி – டு பிளெஸ்ஸி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 67 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. டு பிளெஸ்ஸி 28 ரன் (19 பந்து, 5 பவுண்டரி) விளாசி நூர் அகமது பந்துவீச்சில் திவாதியா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 11 ரன் எடுத்து ரஷித் சுழலில் கிளீன் போல்டானார். மஹிபால் லோம்ரர் 1 ரன் எடுத்து நூர் சுழலில் விக்கெட் கீப்பர் சாஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட, ஆர்சிபி 9.1 ஓவரில் 85 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய கோஹ்லி 35 பந்தில் அரை சதம் அடித்தார்.

The post பெங்களூருவில் கனமழை ஆர்சிபி – குஜராத் போட்டி தாமதமாக தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Bangalore ,RCB ,Gujarat ,Royal Challengers ,Gujarat Titans ,RCP ,Dinakaran ,
× RELATED கடின உழைப்புக்கான பலன்: விராட் கோலி நெகிழ்ச்சி