×

கேமரூன் கிரீன் அதிரடி சதம் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

மும்பை: ஐதராபாத் அணியுடனான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். பிளே ஆப் சுற்று வாய்ப்புக்கு வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் மும்பை அணி இப்போட்டியில் களமிறங்கியது. விவ்ராந்த் ஷர்மா (அறிமுகம்), மயாங்க் அகர்வால் இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. விவ்ராந்த் 69 ரன் (47 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் மாற்று வீரர் ரமன்தீப் சிங் வசம் பிடிபட்டார்.

சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மயாங்க் 83 ரன் எடுத்து (46 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) மத்வால் வேகத்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்து ஜார்டன் பந்துவீச்சில் வெளியேற, ஹெய்ன்ரிச் கிளாசன் (18 ரன்), ஹாரி புரூக் (0) இருவரும் மத்வால் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்தது. கேப்டன் மார்க்ரம் 13 ரன், சன்விர் சிங் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் மத்வால் 4 ஓவரில் 37 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஜார்டன் 1 விக்கெட் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. இஷான் கிஷன், கேப்டன் ரோகித் இணைந்து துரத்தலை தொடங்கினர். இஷான் 14 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் புரூக் வசம் பிடிபட்டார். அடுத்து ரோகித்துடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ஐதராபாத் பந்துவீச்சை பதம் பார்க்க, மும்பை ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கிரீன் 20 பந்தில் அரை சதம் விளாச, ரோகித் 31 பந்தில் அரை சதம் அடித்தார். ரோகித் 56 ரன் எடுத்து (37 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) மயாங்க் தாகர் பந்துவீச்சில் நிதிஷ் குமார் வசம் பிடிபட்டார்.

கிரீன் – சூரியகுமார் ஜோடி அதிரடியைத் தொடர, மும்பை இந்தியன்ஸ் 18 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து அபாரமாக வென்றது. கிரீன் 100 ரன் (47 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), சூரியகுமார் 25 ரன்னுடன் (16 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்த கிரீன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மும்பை அணி 14 லீக் ஆட்டத்தில் 8வது வெற்றியை பதிவு செய்து 16 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. ஆர்சிபி – குஜராத் அணிகளிடையேயான கடைசி லீக் ஆட்டத்தின் முடிவைப்பொறுத்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் 4வது அணி எது என்பது உறுதியாகும்.

The post கேமரூன் கிரீன் அதிரடி சதம் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Cameron Green ,Mumbai Indians ,Mumbai ,Hyderabad ,Wankhede stadium ,Dinakaran ,
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ