×

56 கிராம மக்கள்… 225 மாட்டுவண்டி… 1000 கார், வேன், டிராக்டரில் பயணம் 1,500 ஆடுகள் பலியிட்டு குலதெய்வ விருந்து: 300 ஆண்டாக தொடரும் பாரம்பரியம்

சிவகாசி: சிவகாசி அருகே கூடமுடையார் அய்யனார் கோயில் குல தெய்வ வழிபாட்டிற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாட்டுவண்டியில் வந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அகத்தாரிருப்பு கிராமம் உள்ளது. இக்கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகே எர்ச்சீஸ்வர பொன் இருளப்பசாமி கோயிலுக்கும், சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கூடமுடைய அய்யனார் கோயிலுக்கும், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி வீரமாகாளியம்மன் கோயிலுக்கும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டுவண்டிகளில் வந்து குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு குலதெய்வத்தை வழிபடுவதற்காக 56 கிராமங்களில் இருந்து 225 மாட்டுவண்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், லோடு வேன், கார்களிலும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் அகத்தாரிருப்பு கிராமத்திலிருந்து கடந்த 17ம் தேதி பயணத்தை தொடங்கினர். ரெட்டியாபட்டி, மண்டபசாலை வழியாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வந்து சேர்ந்தனர். தொடர்ந்து பாலவநத்தம் வந்து கடந்த 19ம் தேதி சங்கரலிங்கபுரத்தில் தங்கினர். நேற்று முன்தினம் காலை சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் எல்லைபிரிவு அர்ச்சனா நதியில் தேங்காய் உடைத்து குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு மூன்று பிரிவுகளாக பிரிந்து சென்றனர்.

ஒரு பிரிவினர் ராஜபாளையம் அருகே எர்ச்சீஸ்வர பொன் இருளப்பசாமி கோயிலுக்கும், மற்ற இரு பிரிவினர் சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கூடமுடைய அய்யனார் கோயிலுக்கும் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி வீரமாகாளியம்மன் கோயிலுக்கும் சென்றனர். நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணியளவில் எம்.புதுப்பட்டி கூடமுடைய அய்யனார் கோயில் வந்தடைந்தனர். 100 கி.மீ தூரத்தை 4 நாட்கள் கடந்து வந்த இவர்கள் 7 நாட்கள் தங்கியிருந்து 3 கோயில்களிலும் வழிபடுகின்றனர். பின்பு, வரும் சனிக்கிழமை இரவு பொதுபூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை நேர்த்திக்கடனாக ஆடு பலியிட்டு, அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்டு சென்று, கறியை சமைத்து உணவு தயாரித்து சாப்பிடுவர். இதற்காக 5 லாரிகளில் 1,500 ஆடுகள் கூடமுடையார் கோயிலுக்கு வந்து இறங்கியுள்ளன. பின்னர் 29ம் தேதி தங்களது சொந்த கிராமங்களுக்கு கிளம்புகின்றனர்.

The post 56 கிராம மக்கள்… 225 மாட்டுவண்டி… 1000 கார், வேன், டிராக்டரில் பயணம் 1,500 ஆடுகள் பலியிட்டு குலதெய்வ விருந்து: 300 ஆண்டாக தொடரும் பாரம்பரியம் appeared first on Dinakaran.

Tags : Kuladeva Feast ,Shivakasi ,Goudamudayar Ayanar ,Sivakasi ,Ramanathapuram district ,Gula ,Goddess ,Kuladaiva Feast ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...