×

ராணுவ வீரர்கள் நாட்டின் அளவிட முடியாத சொத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நாட்டின் அளவிட முடியாத ஒரு சொத்து என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஆளுநரின் எண்ணித் துணிக திட்டத்தின் கீழ் படைவீர்கள், வீர மங்கையர்கள் மற்றும் வீரதீர பதக்கங்கள் பெற்ற முப்படை ராணுவ வீரர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில்: நாட்டில் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாராட்டுகள் முறையாக வழங்கப்படுவதில்லை. நாட்டிற்கு ராணுவம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது திருக்குறளில் கூறப்பட்டு உள்ளது. ஒரு நாட்டின் ராணுவம் பலமாக இருந்தால் அது அரசனுக்கு மட்டும் இல்லாமல் மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும். பலமான ராணுவம் என்பது ஒரு நாட்டின் பெருமை. அப்படி பலமான ராணுவம் இல்லையென்றால் நாடு என ஒன்றும் இல்லை.தமிழ்நாட்டில் இறந்த ராணுவ வீரர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என பார்த்து அவர் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் அவருடைய படத்தை பொறுத்த வேண்டும்.

அந்த ராணுவ வீரரின் நினைவு நாளில் அவருக்காக விழா எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை எனக்கு உள்ளது. இதற்காக பெரிய அளவில் நிதி செலவிட வேண்டிய தேவை இல்லை. முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் வாட்ஸ்அப் குழு அமைத்து குடும்பமாக செயல்பட வேண்டும். அந்த குழுவில் உங்கள் பிரச்னைகள் மட்டும் இல்லாமல் அவரகளது மகிழ்ச்சியும் தெரிவிக்கலாம். குழு அமைத்து நீங்கள் தெரிவித்தால் தான் உங்கள் குரல் வெளியே கேட்கும். மேலும், தமிழ்நாடு என்பது ஆன்மீகத்தின் தலைநகரம் மட்டும் இல்லை, இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை தொடங்கிய ஒரு இடம். தமிழ்நாட்டில் நமக்கு தெரியாத நூற்றுக்கணக்கான சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வீரர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post ராணுவ வீரர்கள் நாட்டின் அளவிட முடியாத சொத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Chennai ,Tamil Nadu ,Governor RN Ravi ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து