×

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் பயணம்

சென்னை: தமிழ்நாட்டிற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசு முறைப்பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் செல்கிறார். இந்தியாவில் இரண்டாவது பொருளாதாரம் கொண்ட பெரிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அந்தவகையில், சமீபத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், மிட்சுபிஷி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பெருவயல் கிராமத்தில் 52.4 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அந்த உடன்படிக்கை கையெழுத்தானது. இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் வண்ணம், சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டிற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில், அரசு முறைப்பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பயணத்தின்போது, இரு நாடுகளின் தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கும் முதல்வர், தமிழ்நாட்டின் வளங்கள், ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும், புதிய தொழில் கொள்கைகள் குறித்தும் முதலீட்டு நிறுவனங்களிடம் விவாதிக்க உள்ளார். முதல்வரின் பயணத்தையொட்டி நேற்று சென்னையில் இருந்து விமான மூலம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சிங்கப்பூர் சென்றுள்ளனர். முதல்வரின் பயணத்துக்கான ஏற்பாடுகளை அவர்கள் மேற்கொள்ள உள்ளனர். மேலும், சிங்கப்பூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கிறார்.

இதில், சிங்கப்பூர் – இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும் இருதரப்பு அரசு அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். குறிப்பாக, இம்மாநாட்டில், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் மற்றும் வர்த்தக உறவுகளுக்கான அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிங்கப்பூருக்கான இந்திய உயரதிகாரி பி.குமார் மற்றும் எஸ்ஐசிசிஐ தலைவர் நீல் பரேக் ஆகியோர் கலந்துக்கொள்கின்றனர். இந்த மாநாட்டின்போது தமிழ்நாடு அரசுக்கும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்து கொண்டு ஜப்பான் மற்றும் இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகள் சார்ந்த கூட்டங்களில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் பயணம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Singapore ,Tamil Nadu ,CHENNAI ,M.K.Stalin ,India ,M. K. Stalin ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...