×

வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தி நிலையத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ( Solar Power Plant) தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறையில் கால சூழ்நிலைகளுக்கேற்ப, விஞ்ஞான தொழில்நுட்பத்தோடு பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் இரு நாட்களுக்கு முன்பு 48 திருக்கோவில்களின் பிரசாதங்கள் அஞ்சல் வழியாக இந்தியா முழுவதும் அனுப்புகின்ற திட்டத்தையும் 50 பிரசித்திப் பெற்ற திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருமுறைகள் உள்ளிட்டவற்றை ஒலி வடிவில் கேட்டு மகிழ்வடையும் வகையிலும் திருக்கோயில் என்னும் கைபேசி செயலி தொடங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்றைக்கு சிட்டி யூனியன் வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்கு ரூபாய் 25 லட்சம் செலவில் சூரிய மின் சக்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சூரிய மின் சக்தி நிலையமானது திருக்கோயில் முழுமைக்கும் சூரிய மின் ஒளியிலிருந்து பெறப்படுகின்ற மின்சாரத்தின் வாயிலாக மின்சக்தியை நிறைவு செய்யும் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திருக்கோயில்களில் சூரிய மின்சக்தி கட்டமைப்பு நிறுவப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட சிறு சிறு பணிகளுக்கு தான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. திருக்கோயில் முழுமைக்கும் சூரிய மின்சக்தி நிறுவப்பட்டு இருக்கின்ற முதல் திருக்கோயில் என்ற பெருமையை வடபழனி ஆண்டவர் திருக்கோயில் பெற்றிருக்கின்றது. இதற்காக முழு முயற்சி எடுத்திட்ட அனைவருக்கும் துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திருக்கோயில் முழுமைக்கும் சூரிய மின்சக்தி பயன்படுத்துவதால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்சாரத்தை தடை செய்யவில்லை. திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் வேளையில் உற்பத்தியாகும் சூரிய மின் சக்தி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்படுவதன் மூலம் கணிசமான தொகை நம்முடைய திருக்கோவிலுக்கு வருகின்ற நல்ல கட்டமைப்பையும் உருவாக்கி இருக்கின்றோம்.

இந்து சமய அறநிலையத்துறையில் தொடங்கப்படும் பணி வெற்றியடைகின்ற நிலையில் அதைத் தொடர்ச்சியாக அனைத்து திருக்கோயில்களுக்கும் கொண்டு செல்வதை வாடிக்கையாக இந்த ஆட்சியில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மகா சிவராத்திரி விழாவை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் முதலில் தொடங்கி, ஐந்து கோயில்களுக்கு விரிவுபடுத்தினோம். தற்போது ஆறு திருக்கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற இருக்கின்றது.

ஒரு நல்ல நிகழ்வு ஒரு திருக்கோயிலில் தொடங்கப்பட்டு அது வெற்றிகரமாக பக்தர்களுக்கும் அந்த திருக்கோயிலுக்கும் நன்மை பயக்க வழி வகுக்குறது என்றால் தொடர்ச்சியாக அந்த திட்டத்தை அனைத்து திருக்கோயிலுக்கும் கொண்டு செல்வோம். அந்த வகையில் சூரிய மின் சக்தி நிலையம் அமைக்கும் திட்டத்தினையும் நடைமுறைப்படுத்துவோம்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் அதிகமான பக்தர்கள் அனைத்து திருக்கோயில்களுக்கும், விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற ஒரு நல்ல சூழல் ஏற்பட்டு இந்த ஆட்சியில் இந்த ஆன்மிகப் புரட்சி நடந்து கொண்டிருக்கின்றது. 60 வயதை கடந்தவர்களுக்கு தனியாக க்யூ அமைக்கப்பட்டு இருக்கின்றது.

பழனி திருக்கோயிலுக்கு ரோப் கார் மற்றும் வின்ச்சில் செல்வதற்கு அதிகமான அளவிற்கு மக்கள் வருகிறார்கள் அதைத் திட்டமிட்டு தான் கூடுதலாக ஒரு வின்ச்சை ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறோம். திருக்கோயிலுக்கு வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அந்தந்த இணை ஆணையர்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தி வருவதோடு, மாதந்தோறும் நடைபெறும் சீராய்வுக் கூட்டத்திலும் உரிய ஏற்பாடுகளை செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
பெருமளவு பக்தர்களை வரவேற்பை பெற்றிருக்கின்ற அஞ்சல் வழி பிரசாதம் அனுப்பும் திட்டமானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிந்தையில் உதித்த ஒரு அற்புதமான திட்டம்.

பிரசாதத்திற்கு உண்டான கட்டணம் மற்றும் அஞ்சல் செலவு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இன்றைய தினம் மட்டும் 65 பேர்கள் பிரசாதம் அனுப்பிட கோரி விண்ணப்பித்துள்ளார்கள். விரைவில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை கண்காணிக்க ஒரு கூடுதல் ஆணையரை நியமித்திருக்கின்றோம்.

திருக்கோயில்களில் கட்டண தரிசன வரிசை நீளம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் பொது வரிசையில் வருபவர்களுடைய வரிசை நீளம் அதிகமாக இருக்கலாம் ஆனால் இருவரும் ஒரே சமய இடைவெளியில்தான் சாமி தரிசனம் செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. த.வேலு, திரு. ஜெ. கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், திருக்கோயில் தக்கார் எல். ஆதிமூலம், சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குனர் காமகோடி, மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி, இணை ஆணையர் அர.சுதர்சன், திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தி நிலையத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Vadapalani Andavar Thirukoil ,Chennai ,Chief Minister ,M.K.Stal ,Hindu Religious Charities ,PK Shekharbabu ,Vadapalani Arulmiku Vadapalani Andavar Thirukoil ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...