×

கலாசாரத்தை காக்கும் கிராமங்கள் வழக்கத்தை விட இந்தாண்டு கூடுதல் இடங்களில் ஜல்லிக்கட்டு: புதுகையில் அதிகபட்சமாக 67 இடங்களில் நடந்தது

புதுக்கோட்டை: தமிழகத்தில் வழக்கத்தை விட இந்தாண்டு அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 67 இடங்களில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடந்துள்ளது. தமிழகத்தில் சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை காக்கும் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டாகவும் இது போற்றப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இந்நிலையில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 2017ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய தன்னெழுச்சி போராட்டத்தால் ஜல்லிக்கட்டு மீண்டெழுந்தது. தமிழக அரசு இயற்றிய சிறப்பு சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததால் மீண்டும் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இடையில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் (2019, 2020) ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் கிராமங்கள் தோறும் வழக்கமான உற்சாகத்துடன் நடந்து வருகிறது. குறிப்பாக 2021ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு பேமஸ் மதுரை மாவட்டம். உலக புகழ்மிக்க அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம், பாலமேடு கிராமங்களில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும். ஆனாலும் தமிழகத்தை பொறுத்தவரை மதுரையை விட புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இம்மாவட்டத்தில் 2018ல் 34 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு 2021ல் 47 இடங்களாகவும், கடந்தாண்டு 50 இடங்களாகவும் அதிகரித்தது. இந்தநிலையில் இந்தாண்டு இதுவரை 67 இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு போட்டிகள் நடந்துள்ளது. இதில் அன்னவாசல் மாங்குடி, இலுப்பூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்தாண்டு முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. மே மாதம் முடிய 10 நாட்கள் இருப்பதால் இன்னும் பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறுகையில், ஜல்லிக்கட்டு ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்படும். இது எங்களின் ரத்தத்திலும், உணர்விலும் கலந்தது. ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றனர்.

The post கலாசாரத்தை காக்கும் கிராமங்கள் வழக்கத்தை விட இந்தாண்டு கூடுதல் இடங்களில் ஜல்லிக்கட்டு: புதுகையில் அதிகபட்சமாக 67 இடங்களில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Bhuvu ,Pudukkotta ,Jallikutu ,Tamil Nadu ,Jallikattu ,New Delhi ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...