×

₹7 லட்சம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டு விவகாரம்: ₹4 லட்சம் கோடி யாரிடம் பதுக்கப்பட்டுள்ளது: அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கேள்வி

சென்னை: ₹7 லட்சம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிப்பட்டதில், 4 லட்சம் கோடி ரூபாய் யார் மூலமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, புதிய ₹2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. புதிய ₹2000 நோட்டுக்களை வைத்துள்ளவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்றி கொள்ளலாம் என கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியர்கள் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் கூறி வருகிறது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுக்களை விலக்கவும் ₹500, ₹1000 நோட்டு தடை செய்யப்பட்டன. அதே ேநரத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டன. அன்றே இது தொடர்பாக கேள்வி எழுப்பினோம். 1000 ரூபாய் கள்ளப்பணமாக மாறும் என்று சொன்னால், 2 ஆயிரம் ரூபாய் கள்ள பணமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, 2 ஆயிரம் ரூபாய் தாள்களை அச்சிடுவது தவறான முடிவு என்று கூறியிருந்தோம். அதே போல் 7 ஆண்டுகள் கழித்து, அதே காரணத்தை சொல்லி இன்றைக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

இது விந்தையாக இருக்கிறது.
இரண்டாவது ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 7 லட்சம் கோடி ரூபாய் பெறுமானம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டது. அதில் சுமார் 3 லட்சம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அப்போது, 4 லட்சம் கோடி பெறுமானம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் எங்கு மறைந்தன. யாரிடம் பதுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியும், ஒன்றிய அரசும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அதேபோன்று, அது கள்ளப்பணமாக இருப்பதை அறிந்தும், 2000 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து சட்டரீதியாக ஏற்று கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்களிடம் ₹2 ஆயிரம் தாள்கள் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால், சிறு, குறு வியாபாரிகள் பல பிரச்னைகளை எதிர் நோக்குவார்கள். வியாபாரத்தை விடுத்து, வங்கிக்கு தினமும் சென்று பத்து, பத்து நோட்டுக்களாக மாற்றுவது என்பது எளிதல்ல. வங்கி ஊழியர்களுக்கும் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஒரு நாடாளுமன்ற ஆய்வு குழு இந்த முடிவின் சாதக, பாதங்களை ஆய்வு செய்ய வேண்டும். அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ₹7 லட்சம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டு விவகாரம்: ₹4 லட்சம் கோடி யாரிடம் பதுக்கப்பட்டுள்ளது: அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : All India Bank Employees' Federation ,Chennai ,All India Bank Employees Federation ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...